அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பொது கவுன்சலிங் ஜூன் 1ம் தேதி துவக்கம்: சிறப்பு பிரிவினருக்கு நேற்று துவங்கியது; ஜூன் 20ம் தேதி வரை நடக்கும் என அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில், இந்த கல்வி ஆண்டில் மாணவ மாணவியரை சேர்க்க கவுன்சலிங் நடக்கிறது. இது தவிர மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் குறித்த விவரங்கள், கல்லூரிக் கல்வி இயக்கக இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கும் ேபாது, 5 கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளில் எத்தனை பிரிவில் வேண்டுமானாலும் விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாட்டில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன.

இந்த இடங்களுக்கு 1 லட்சத்து 7ஆயிரத்து 935 உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்காக சுமார் 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 மாணவ மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர் 54 ஆயிரத்து 638 பேரும் உள்ளனர். அதில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 பேர் பதிவுக்கட்டணம் செலுத்தி உள்ளனர். மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களுக்கான பட்டப் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவ மாணவியருக்கு அந்தந்த மொழிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டன.

மற்ற பாடங்களுக்கும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறப்பு கவுன்சலிங் தொடங்கியது. இது 31ம் தேதி வரை நடக்கும். அதைத் தொடர்ந்து ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை முதற்கட்ட கவுன்சலிங் நடக்கும். ஜூன் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை 2ம் கட்ட கவுன்சலிங் நடக்கும். இதையடுத்து, கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ம் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

* பி.காம் படிக்க அதிகம்பேர் விண்ணப்பம்
சென்னை மாநிலக் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர 11 ஆயிரத்து 604 பேரும், பிஏ தமிழ் பாடப்பிரிவில் சேர்வதற்காக 9,410 பேரும், பிஎஸ்சி வேதியியல் படிப்பில் சேர்வதற்காக 8,229 பேரும், கோவை அரசுக் கல்லூரியில் சேர்வதற்கு 8 ஆயிரம் பேரும், வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 7599 பேரும், மயிலாப்பூர் ராணிமேரிக் கல்லூரியில் பி.காம் வகுப்பில் சேர 7006 பேரும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 6719 பேரும், மாநிலக் கல்லூரியில் இளநிலை(பிஏ) ஆங்கிலம் படிப்பில் சேர்வதற்கு 6717 பேரும், சேலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை(பிஏ) தமிழ் பாடப்பிரிவில் சேர 6,570 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

Related posts

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக ஒருவர் கைது..!!

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடற்கரைக்கு இன்று யாரும் செல்ல வேண்டாம்

ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்!!