அடிப்படை வசதிகள் கோரி அரசுப்பள்ளி மாணவிகள் சாலைமறியல்: அதிகாரிகள் சமரசம்

பூந்தமல்லி: அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி போரூர் அரசுப் பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை வளசரவாக்கம் அடுத்த சின்ன போரூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும், தண்ணீர் சரிவர வரவில்லை எனவும் கூறி நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு பள்ளியின் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பள்ளியில் கழிவறைகளை முறையாக பராமரிக்காத பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போரூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளி கழிவறைகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறியதைடுத்து மாணவிகள் வகுப்பறைக்குச் சென்றனர்.

இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை பள்ளி ஆசிரியர்களிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு வந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Related posts

ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மீண்டும் தீ

மே-31: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை