அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி : உண்மையைப் பேசுவதற்கு நான் எந்த விலையையும் கொடுக்க தயார் என பேச்சு!

டெல்லி : டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து அதன் சாவியை ஒப்படைத்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2004-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட டெல்லியில் உள்ள துக்ளக் சாலையில் 12ம் எண் கொண்ட பங்களாவில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், ‘நிரவ் மோடி, லலித் மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும் மோடி என வந்தது எப்படி?’ என்று பேசிதற்காக சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 24ம் தேதி அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்து இருந்தது.

2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டு இருந்தது. மேலும் ஏப்ரல் 22-ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவைச் செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி, அதன் சாவியை சாவியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ”இந்த நாடு ராகுல் காந்தியின் வீடு. நாட்டு மக்களின் இதயங்களில் ராகுல் குடியிருக்கிறார். மக்களுடனான அவரது உறவை பிரிக்க முடியாது. அவரை தங்களது மகனாக, சகோதரனாக, தலைவராகப் பார்க்கிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்திய மக்கள் இந்த வீட்டை 19 ஆண்டுகளாக எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஆனால் அந்த வீடு என்னிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. உண்மையைப் பேசுவதற்கு நான் எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

Related posts

ஐஏஎஸ் அதிகாரி போல நடித்து பணம் பறித்த ஐ.டி. ஊழியர் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட்!

பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தம்!