5 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிந்தனர் திமுக இளைஞரணி மாநாடு: குலுங்கியது சேலம்: 100 அடி கம்பத்தில் கொடியை ஏற்றினார் கனிமொழி

சேலம்: சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில், திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிந்ததால் சேலம் குலுங்கியது. திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு கடந்த 2007ம் ஆண்டு, திருநெல்வேலியில் கோலாகலமாக நடந்தது. அதன் பின்னர், இளைஞரணியின் வரலாற்று சிறப்பு மிக்க இரண்டாவது மாநில மாநாடு, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று நடந்தது.

இதற்காக பெத்தநாயக்கன்பாளையத்தில் மிக பிரமாண்டமான மாநாட்டு திடலை, திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி மற்றும் இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 9 லட்சம் சதுரடி பரப்பளவு கொண்ட மைதானத்தில், மாநாட்டு திடல் அமைக்கப்பட்டது. மாநாட்டு பந்தலுக்குள் 1.5 லட்சம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

மாநாட்டின் நுழைவு வாயில்கள் ஒவ்வொன்றும், வண்ண மயமாக அமைக்கப்பட்டிருந்தது. பெரியார், அண்ணா, கலைஞர், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவங்கள் பொறிக்கப்பட்டு, கோட்டை போல் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. திமுக வரலாற்றை விளக்கும் வண்ண ஓவியங்கள், மாநில உரிமைகளை மீட்பது தொடர்பான எழுச்சி முழக்க வாக்கியங்கள் என ஒவ்வொன்றும், மக்களின் மனதில் நிறைந்து நிற்கும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டையொட்டி, நேற்று முன்தினம் மாலையே, முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் முன்னோடிகள் சேலம் வந்தனர். மாநாட்டு திடலுக்கு அன்றையதினம் மாலை 5.45 மணிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, இளைஞரணியின் சுடர் ஓட்டத்தை நடத்தி வந்த நிர்வாகிகள், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர். அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். பின்னர், இளைஞரணியின் பைக் பேரணி, டிரோன் காட்சி நிகழ்ச்சிகள் நடந்தது.

திராவிட இயக்க வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் காட்சி, 1500 டிரோன்கள் மூலமாக விளக்கப்பட்டது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரசித்து பார்த்தார். நேற்று காலை 9 மணிக்கு மாநாடு தொடங்கியது. மாநாடு திடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியாக 9.05 மணிக்கு வந்தார். இதனை தொடர்ந்து, மாநாட்டு திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், துணை பொதுச் செயலாளரும், மகளிரணி செயலாளருமான கனிமொழி எம்பி, மேடை அருகே நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கம்பத்தில் 16 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட கட்சி கொடியை ஏற்றி வைத்தார். கொடிக்கம்பத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

காலை முதலே மாநாட்டு திடலில் திமுக இளைஞரணியின் மாநாட்டு பாடல் ஒலிபரப்பப்பட்டது. கொடியேற்றி வைத்த பிறகு, அருகில் உள்ள பெரியார், அண்ணா, கலைஞர், அன்பழகன் ஆகியோரின் சிலைகளுக்கு முதல்வர் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மாநாட்டு திடலை மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், இளைஞரணி நிர்வாகிகள் விழா மேடைக்கு வந்தனர். அங்கு மாநாட்டு தலைவராக, இளைஞரணி செயலாளர் உதயநிதியை, இளைஞரணி நிர்வாகிகள் இன்பா.ஏ.என்.ரகு முன்மொழிய, சீனிவாசன் வழிமொழிந்தார்.

இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் வரவேற்று பேசினார். தொடர்ந்து, ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது உள்பட 25 தீர்மானங்களை, தொண்டர்களின் பலத்த கரகோஷங்களுக்கு இடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். அதனை தொடர்ந்து, 23 தலைப்புகளில் கட்சியின் முன்னோடிகள், அமைச்சர்கள் பலர் பேசினர்.

மாலை 4 மணிக்கு பின் கனிமொழி எம்பி, இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, ெபாருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பேசினர். பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றினார். மாநாட்டின் நிறைவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவு பேருரை ஆற்றினார். பிரமாண்டமாக நடந்த இம்மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் வந்ததால் சேலம் மாநகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதுமே குலுங்கியது.

* சிறப்பு மருத்துவ முகாம் அலுவலகம்
மாநாட்டில் மருத்துவ முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. மருத்துவர்கள் கொண்ட குழுவினர் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தம், சுகர் பரிசோதனை செய்யப்பட்டது. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 2 தொண்டர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

* போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை
திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக சென்னை பகுதியில் இருந்து சேலம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் சென்றதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.

* உற்சாக செல்பி
மாநாட்டு முகப்பு வாயிலில் உடன்பிறப்பே என கலைஞரின் புகைப்படம் உள்ளது. அதன் முன்பு தொண்டர்கள் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். அதேபோல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் முன்பும் தொண்டர்கள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாகமடைந்தனர்.

* டிபன் பாக்சில் சப்பாத்தி வழங்கல்
மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தொண்டர்களுக்கு காலை உணவு டிபன் பாக்ஸ்களில் சப்பாத்தி வைத்து வழங்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், அவர்களுக்கு பல்வேறு வகையிலும் வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான சிறு சிறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. திமுக கட்சி துண்டுகள், வேட்டிகள், உணவு வகைகள் விற்பனை சூடு பிடித்தது.

* செல்போன் ‘ஜாம்’
திமுக இளைஞரணி மாநாட்டில் தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இதனால், பெத்தநாயக்கன்பாளையத்தில் செல்போன் செயல்பாடு நின்றுபோனது. செல்போனில் டவர் இருந்தாலும் எதிர் முனையில் பேசுபவர்கள் என்ன பேசுகிறார்கள் என கேட்க முடியாத நிலை ஏற்பட்டது.

* சிறப்பு ரயிலில் தொண்டர்கள்
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ரயில் நேற்று முன்தினம் இரவு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு நேற்று காலை 8.15 மணிக்கு பெத்தநாயக்கன்பாளையத்தை வந்தடைந்தது. இந்த ரயிலில் முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் தலைமையில் 1,500 பேர் வந்திறங்கினர். பின்னர், அவர்கள் கட்சி கொடியை ஏந்தியவாறு மேள,தாளத்துடன் மாநாட்டு திடலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

* 72 பிரமாண்ட எல்இடி டிவிகள் மூலம் ஒளிபரப்பு
திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்காக சுமார் 9 லட்சம் சதுரடி பரப்பளவில் பிரமாண்டமான பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 600 அடி அகலமும், 1,200 அடி நீளமும் கொண்ட மாநாட்டு பந்தலும், சுமார் 1,000 அடி நீளம் கொண்ட உணவுக் கூடமும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 3 பகுதிகளில் தொண்டர்கள் அமர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையிலும், 2 இடங்களில் பிரமாண்டமான உணவு அருந்தும் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டு நிகழ்ச்சிகளை தொண்டர்கள் கண்டு ரசிக்கும் வகையில் பிரமாண்டமான 72 எல்இடி டிவிகள் வைக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதன் மூலம் மேடையின் அருகில் இருந்து பார்ப்பது போன்று இருந்ததாக தொண்டர்கள் தெரிவித்தனர்.

Related posts

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்