சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்குங்கள்: மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்

சென்னை: பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்குமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் 75வது சுதந்திர தினவிழா உரையின் போது அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு பொதுமக்கள் தங்களின் பங்களிப்பை அளிக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது: அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், ராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ சீருடைகள், ஐ.என்.ஏ. அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரிடையாக சென்று வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும். இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை அமையவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வைகோ உடல் நலம் குறித்து விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

காரைக்காலில் தூங்கி வழியும் துப்புரவு நிறுவனம்: புழுதி பறக்கும் சாலைகள்

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பிரதமர் மோடி, அமித்ஷா? குழப்பத்தில் சிக்கி தவிக்கும் பிசிசிஐ