முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் அலையாத்திக்காடுகளில் குவியும் வெளிநாட்டு பறவைகள்: சுற்றுலா பயணிகள் வருகை

முத்துப்பேட்டை/ பேராவூரணி: முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளில் வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டு இருப்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடுகள் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். இந்த காடுகள் புயல் மற்றும் சூறாவளி, சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களை பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. கடலோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுக்கின்றன. முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படும் இக்காடுகள் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை நீண்டுள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் அலையாத்திக்காடுகளில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியிருக்கும்.

இங்கு கடும் குளிர் நிலவும். இது பறவைகளுக்கு ஏற்ற சூழல் என்பதால் வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகமிருக்கும். மற்ற நாட்களில் உள்நாட்டு பறவைகளை இப்பகுதிகளில் அதிகமாக காணலாம். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கோடை மழையால் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள அதிராம்பட்டினம் சுற்றுப்புற பகுதிகள், அலையாத்தி காடுகள் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் வழக்கத்திற்கு மாறாக இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பூநாரை, கூளக்கிடா, செங்கால்நாரை, நீர்க்காகம், ஊசிவால் வாத்து, வெண்கொக்கு,

கொளத்துக்கொக்கு போன்ற பறவைகளும், சாம்பல் நாரை, வெண் கொக்குகள், மயில்கால்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், மடையான், பாம்புதாரா, சிறுதலைவாத்து, நாமக்கோழி, பவளக்கால் உல்லான், நாராயணபட்சி, கருமூக்கி, வெண்கொக்கு, மயில்கள் உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு பறவைகளும் இங்குள்ள அலையாத்தி காடுகளில் முகாமிட்டுள்ளன. இதையடுத்து இப்பறவைகளை காண முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர்.

சரணாலயத்திலும் தஞ்சம்
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. 111 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாசன ஏரியை உள்ளடக்கிய இந்த சரணாலயத்தை வனத்துறை பராமரித்து வருகிறது. இங்கும் தற்போது வெளிநாட்டு பறவைகள் ஏராளமாக தங்கியிருக்கின்றன.

Related posts

நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி பேச்சு

யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸிற்கு 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு