கொடைக்கானல் கோடைவிழாவில் 66 ஆயிரம் பேரை ஈர்த்த 5 நாள் மலர் கண்காட்சி: கட்டணமாக ரூ.22 லட்சம் வசூல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் நடைபெற்று வந்த மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த மே 26ம் தேதி 60வது மலர் கண்காட்சி தொடங்கியது. கடந்த ஆண்டு மலர் கண்காட்சி 5 நாட்கள் நடந்தது. இந்த ஆண்டு 3 நாட்கள் மட்டுமே மலர் கண்காட்சி நடத்த தோட்டக்கலைத்துறையினர் முடிவு செய்திருந்தனர். இருப்பினும் கோடை விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலில் குவிந்ததால் கூடுதலாக இரண்டு நாட்கள் மலர் கண்காட்சி நீட்டிக்கப்பட்டது. இந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. மலர் கண்காட்சியை கடந்த ஆண்டு 53 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். இவர்களிடம் இருந்து சுமார் 19 லட்சம் ரூபாய் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஐந்து நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை 66 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.22 லட்சம் கட்டணமாக வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 51 ஆயிரத்து 576 சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர். இவர்களிடமிருந்து கட்டணமாக 12 லட்சத்து 85 ஆயிரத்து 115 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு மே மாதம் பிரையண்ட் பூங்காவிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 497 பேர் வருகை தந்துள்ளனர். இவர்களிடம் இருந்து 39 லட்சத்து 94 ஆயிரத்து 675 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரையண்ட் பூங்காவிற்கு 72 ஆயிரத்து 327 சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 17 லட்சத்து 8 ஆயிரத்து 855 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மே மாதத்தில் கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் அதிகரித்து ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 294 சுற்றுலாப் பயணிகள் பிரையண்ட் பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர். இவர்களிடம் இருந்து நுழைவு கட்டணமாக 53 லட்சத்து 28 ஆயிரத்து 345 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.

Related posts

5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குகள் பதிவு

திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் முற்போக்கு இந்தியாவை படைக்க உறுதியேற்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 296 பேர் அடங்கிய 10 குழுக்கள் தயார்