பட்டாசு ஆலை வெடித்து தொழிலாளி பரிதாப சாவு: முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரண உதவி

ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்த ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பனையடிப்பட்டி கிராமத்தில் உள்ளது. நேற்று காலை ஆலையில் உள்ள ஒரு அறையில் பட்டாசு தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களை கலக்கும் பணியில், கண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த சண்முகராஜ் (36) ஈடுபட்டிருந்தார். அப்போது மூலப்பொருட்கள் உராய்வு காரணமாக எதிர்பாராதவிதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில், அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் ஜெயபால் (48), ஆலை மேற்பார்வையாளர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (53) ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த சண்முகராஜ் குடும்பத்துக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை..!!

கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!

புழலில் வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து படுகாயம்