நெருப்புடன் விளையாட்டு

தமிழக ஆளுநராக கடந்த 2021 செப்டம்பர் மாதம் பதவி ஏற்ற நாளிலிருந்தே ரவீந்திர நாராயண ரவி மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கத் துவங்கினார். தமிழக மக்கள் நலன் சார்ந்து திமுக அரசால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல மசோதாக்களை காரணமே இன்றி நிறுத்தி வைத்திருந்தார். இதனால் அவரது செயல்பாடுகளை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள் என்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற மாநில அரசுகள் நீதிமன்றத்தை நாடும் நிலையை உருவாக்குவதா? ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் என்று பஞ்சாப் கவர்னருக்கு எதிரான வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம் இதே நிலையைத்தான் தமிழகத்திலும் பார்க்கிறோம். காலவரையறையின்றி மசோதாக்களை கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது என்று கருத்து தெரிவித்திருந்தது.

இதையடுத்து கிடப்பில் வைத்திருந்த மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி மீண்டும் களங்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி கடைசியில் உச்ச நீதிமன்றத்தால் குட்டுப்பட்டு தமிழக முதல்வருடன் சந்திப்பு நடத்தி அமைதியானார். ஆனால் அவரது அமைதி நீண்டநாள் நீடிக்கவில்லை. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவின் ஊதுகுழல் போல் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் நடக்கும் திராவிட மாடல் அரசால் தங்களது கொள்கைளை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மீண்டும் அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கத் துவங்கினார்.

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் கிழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்காலிகமாக தண்டனையையும், தீர்ப்பையும் நிறுத்தி வைத்தது. இதையடுத்து மீண்டும் எம்எல்ஏவான அவரை அமைச்சராக நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

ஆனால் உச்ச நீதிமன்றம், தீர்ப்பை நிறுத்தி வைத்திருக்கிறதே தவிர, அவர் குற்றவாளி அல்ல என கூறவில்லை என்பதால், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

முதல்வரின் பரிந்துரைப்படி பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என ஆளுநர் கூறியுள்ளது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி, பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என அவர் எப்படி கூறமுடியும். பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தொடர்பான வழக்கில் முடிவெடுக்க ஆளுநர் ரவிக்கு ஒரு நாள்கெடு விதிக்கிறோம். இல்லையென்றால்.. நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை. என்று தலைமை நீதிபதி கடுமையாக கூறியுள்ளார்.

Related posts

பர்மிங்காம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து எரிசக்தி அமைப்பு தொடர்பான புதிய முதுகலை படிப்பு: சென்னை ஐஐடி தொடங்கியது

வடலூர் சத்தியஞான சபை பெருவெளியில் உரிய அனுமதிகளை பெற்றே வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்

குமரி நாடாளுமன்ற தொகுதி தேர்வு செலவுக்கு வழங்கப்பட்ட பணத்தை ஆட்டய போட்ட பாஜவினர்: பரபரப்பு போஸ்டர்