ஒரு திட்டப்பகுதிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின் தனிநபர் எவரும் மேம்பாட்டு பணி செய்ய முடியாது: மசோதா தாக்கல்

சட்டசபையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி அறிமுகம் செய்த சட்ட மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது: நில சேர்மப்பகுதி மேம்பாட்டுத் திட்டம், தனி ஒருவர் அல்லது தனி நபர்கள் இணைந்த ஒரு குழுவுக்கு சொந்தமான நிலத்தில், திட்ட அதிகார அமைப்பால் மேம்படுத்தப்பட்ட மற்றும் மேம்பாட்டுக்கான நிலத்தின் பகுதியை அசல் உரிமையாளருக்கு உரிமை மாற்றம் செய்தல் மற்றும் அந்த நிலத்தின் மீதமுள்ள பகுதியை பொதுவான வசதிகள், சிறப்பு வசதிகளை உருவாக்குவதற்கு அல்லது விற்பனைக்காக பயன்படுத்தும் திட்டமாகும்.

இத்திட்டப்படி, ஒரு திட்டப் பகுதிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்பு, இதற்கான நியமன அலுவலர் நியமிக்கப்படுவார். அவர், வரைவுத் திட்டத்தின் மீது பெறப்பட்ட ஆட்சேபணைகள், கருத்துக்களை ஆய்வு செய்து உரிய திட்ட அதிகார அமைப்புக்கு உதவுவார். அதோடு, முதல் நிலை திட்டம் மற்றும் இறுதித் திட்டத்தை தயாரிப்பார். மேலும் அவர் நில உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய தொகையை மதிப்பீடு செய்வார். நில உரிமையாளர்களுக்கு தரவேண்டிய இழப்பீட்டையும் அவர் நிர்ணயம் செய்வார்.

திட்ட அதிகார அமைப்பால் கையகப்படுத்தப்பட்ட அல்லது சொந்தமாக்கப்பட்ட நிலத்தை விற்பனை, பரிமாற்றம், குத்தகைக்கான வரைவு திட்டத்திற்காக வழங்கலாம். தொல்லியல் அல்லது வரலாற்று ஆர்வமுள்ள அல்லது இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், மதநோக்கம், வழிபாட்டுடன் தொடர்புடைய இடங்களை பாதுகாப்பது, எல்லையை வரையறை செய்வதற்காகவும் வழங்கலாம். தாழ்வான சதுப்புநிலம் அல்லது ஆரோக்கியமற்ற பகுதிகளை நிரப்புதல், மீட்டமைத்தல், நிலத்தை சமன் செய்தல் ஆகியவற்றுக்கும் வழங்கலாம்.

திட்டம் தொடர்பான அறிவிப்பு 15 மாதங்களுக்குள் வெளியிடப்படாவிட்டால் அது காலாவதியாகிவிடும். வரைவுத்திட்டம் வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் திட்ட அதிகார அமைப்பிடம் ஆட்சேபனைகளை எழுத்துவடிவமாக மக்கள் கருத்து தெரிவிக்கலாம். வரைவுத் திட்டத்துக்கு அரசு அனுமதியளித்த பின், முதல் நிலை திட்டம் தயாரிக்கப்படும். அதற்கு ஏற்பளிக்கப்பட்ட பின் இறுதித் திட்டம் தயாரிக்கப்படும். இறுதித் திட்டத்துக்கு அரசு 2 மாதங்களுக்குள் அனுமதியளிக்க வேண்டும். அதன்பின் உரிய திட்ட அதிகார அமைப்பு, இறுதித் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் திட்ட பரப்பிடத்தில் உள்ள அனைத்து பணிகளையும் நிறைவேற்ற வேண்டும்.

Related posts

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது

ஒன்றிய பட்ஜெட்: அமைச்சர் ஆலோசனை