கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் நிறைவு: நாளை மறுநாள் வாக்கு பதிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இறுதி கட்ட பிரசாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட தேசிய, மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நாளை மறுதினம் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 29ம் தேதி வெளியானது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 2,613 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி 7 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பீதர், விஜயபுரா, பெலகாவி, கோலார், ராம்நகரம், ஹாசன், சித்ரதுர்கா, விஜயநகர், ரெய்ச்சூர், தென்கனரா, வடகனரா, பெலகாவி ஆகிய மாவட்டங்களில் பொதுகூட்டங்களிலும் பெங்களூரு, மைசூரு, கலபுர்கி ஆகிய மாநகரங்களில் 5 நாட்கள் சாலை பேரணி நடத்தினார். அவரை தவிர பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, தர்மேந்திர பிரதான், தோமர்சிங், ஸ்மிருதி இரானி, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அசாம் மாநில முதல்வர் ஹீமந்த் பிஸ்வாஸ் சர்மா, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூப்பா, மாநில பாஜ தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட தேசிய, மாநில கட்சி தலைவர்கள் பரப்புரை செய்தனர்.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் மாநில
முதல்வர் அசோக்கெலாட், தேசிய பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட கட்சியின் தேசிய, மாநில தலைவர்கள் பரப்புரை செய்தனர்.

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் எச்.டிதேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராஹிம் உள்பட கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பரப்புரை நடத்தினர். ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி உள்பட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் கடந்த 15 நாட்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நேற்று பெங்களூருவில் பிரதமர் மோடி சாலை பேரணி நடத்தினார். காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய பாஜ தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் இறுதி கட்ட பிரசாரம் செய்தனர். இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

* மாநிலத்தில் 224 பேரவை தொகுதிக்கும் நாளை மறுநாள் வாக்கு பதிவு நடக்கிறது.
* பாஜ-224, காங்கிரஸ்-223, மஜத- 217 தொகுதிகள் உள்பட 2,613 வேட்பாளர்களின் தலை எழுத்தை 5.21 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்கின் மூலம் தீர்மானிக்கிறார்கள்.
* தேர்தலில் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி மற்றும் ஊழியர்கள் நாளை காலை முதல் தங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்களுடன் செல்கிறார்கள்.
* தேர்தலில் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க மாநில போலீசாருடன் துணை ராணுவப்படை, ஆயதப்படை, எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

Related posts

காஸா துப்பாக்கிச் சூட்டில் இந்திய அதிகாரி பலி

தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு