விழாக்கோலம் பூண்டது தூங்கா நகரம் மதுரை சித்திரைத் திருவிழா கோலாகல துவக்கம்

* மே 2ல் திருக்கல்யாணம்; 3ல் தேரோட்டம்
* 5ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் அழகர்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று காலை துவங்கியது. மே 2ம் தேதி திருக்கல்யாண வைபவம், 3ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 5ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்றுகாலை மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

காலை 10.35 மணிக்கு மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் சுவாமி சன்னதியின் முன் உள்ள கொடிமரம் முன்பு எழுந்தருளினார். கொடி மரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வண்ணப்பூக்களால் அலங்கரிக்கபட்டிருந்தது.

நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன்வசந்த், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், இந்துசமய அறநிலைத்துறை துணை கமிஷனர் செல்லத்துரை, கோயில் துணை கமிஷனர் அருணாச்சலம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா நடக்கும் 12 நாட்களும் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஏப். 30ம் தேதி பட்டாபிஷேகம், மே 1ம் தேதி திக்குவிஜயமும் நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியாக, மே 2ம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59க்குள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பிலுள்ள திருமண மண்டபத்தில் மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்று இரவு மீனாட்சியம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். மே 3ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் திருத்தேரோட்டம் நடைபெறும். மே 4ம் தேதி சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. அழகர்கோவில் மலையில் இருந்து அழகர் மே 3ம் தேதி புறப்படுகிறார். மே 4ம் தேதி மூன்றுமாவடியில் அழகர் எதிர்சேவை நடக்கிறது. மே 5ம் தேதி அதிகாலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் அழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடக்கிறது.

* ஜொலிக்கும் மாசி வீதிகள்

மீனாட்சியம்மன் – சுந்தரேசுவர் நேற்று முதல் மே 3ம் தேதி வரை காலை மற்றும் மாலை நேரத்தில் பல்வேறு வாகனத்தில் மாசி வீதிகளில் வலம் வருவதையொட்டி, இந்த வருடம் மாசி வீதிகள் முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் சார்பில் 600 உயர்ரக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கோயிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிக்கின்றன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Related posts

மிக கனமழைக்கான எச்சரிக்கை: தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு

சீர்காழி அருகே 2 சிறுவர்களை தெருநாய் கடித்ததால் அச்சம்..!