குடும்ப ஓய்வூதியம் பெறும் நடைமுறையில் மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

வேலூர்: தமிழ்நாடு அரசின் பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாடு அரசில் கருவூலங்கள் மற்றும் வங்கிகள் மூலம் தற்போது 30 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளமும், 7.39 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியமும் பெற்று வருகின்றனர்.

இதில் ஓய்வூதியர்கள் காலத்துக்கு பின்னர், அவர்களது ஓய்வூதியம் அவர்களது வாரிசுதாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக கணக்கிட்டு வழங்கப்படுகிறது. இவ்வாறு குடும்ப ஓய்வூதியமாக பெறும் நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை ஓய்வூதியதாரர்களின் வாரிசுகள் சந்தித்து வந்தனர். இந்த நடைமுறை சிக்கல்களை களைந்து எளிமையான முறையில் பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றுவதற்கான புதிய நடைமுறையை அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்கள், சார்நிலை கருவூல அலுவலர்கள் உட்பட தொடர்புடைய அனைத்து கருவூல அலுவலர்களுக்கும் கருவூல மற்றும் கணக்குத்துறை ஆணையர் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக்க அதிக காலதாமதமும், நடைமுறை சிக்கல்கள் அதிகம் உள்ளதாகவும் அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இனி வரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் கணவன்/மனைவியின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். எனவே குடும்ப ஓய்வூதியம் கோரும் நிலைகளில் அவர்கள் கணவன்/மனைவியின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

திருச்சியில் தெரு நாய்கள் கடித்ததில் 3 பேர் காயம்

சிப்காட் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல்

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: கோவை நீதிமன்றம் உத்தரவு