‘பெண்களுக்கு சொத்தில் உரிமை இல்லை’ எனக் கூறி ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்

*ஊட்டி கலெக்டர், எஸ்பி.,யிடம் புகார்

ஊட்டி : ஊட்டி அருகே உல்லத்தி மேலூர் கிராமத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடையாது என கூறி ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்து உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவியுடன் கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி வட்டத்திற்குட்பட்ட உல்லத்தி மேலூர் கிராமம் உள்ளது. இங்கு 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா (45). இவர் தனது கணவர் ராமகிருஷ்ணன் மற்றும் ஒரு மகன் மற்றும் தனது வயதான தாயுடன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த ஓராண்டிற்கும் மேலாக தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்து கொலை மிரட்டல் விடுத்து வருவோர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் சசிகலா, தனது தாய், கணவர் மற்றும் 5 வயது மகனுடன் வந்து ஊட்டியில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் புகார் மனு அளித்துள்ளார்.

இப்புகாரின் பேரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி லிங்கம் உத்தரவின் பேரில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்களான வழக்கறிஞர்கள் செபாஸ்டியன், குணசேகரன், சிந்து ஆகியோர் பாதிக்கப்பட்டோருக்காக ஆஜராகி புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நேற்று கலெக்டர் மற்றும் எஸ்பியை சந்தித்து புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்கறிஞர்கள் செபாஸ்டியன், குணசேகரன் ஆகியோர் கூறியதாவது: சசிகலா(45)வுடன் பிறந்த 3 சகோதரிகள் உள்ளனர். இவர்களின் தாயார் பார்வதி (75). மற்ற 3 சகோதரிகளும் திருமணமாகி வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். சசிகலா தனது தந்தை வழி பூர்வீக சொத்தான 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த கிராமத்தில் ஊர் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நபர், ‘‘நமது சமூக வழக்கப்படி பெண்களுக்கு சொத்தில் உரிமை இல்லை. எனவே வீட்டையும், விவசாய நிலத்தையும் ஊருக்கு கொடுத்துவிட்டு கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு ஊரைவிட்டு சென்று விட வேண்டும்’’ என மிரட்டியுள்ளார்.

அதற்கு சசிகலா குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இவர்களது வீட்டு வாசலில் மண் கொட்டி வைப்பது, வேலி அமைப்பது, தண்ணீர் கிடைக்காமல் செய்வது, குழந்தைக்கு பால் கொடுக்கக்கூடாது, மருத்துவ வசதி, மளிகை பொருட்கள் கொடுக்கக்கூடாது என பல்வேறு இடையூறுகளை செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அவர்களின் விவசாய நிலத்திற்கு வேலைக்கு செல்லக்கூடாது. மீறி அவர்களிடம் பேசுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தொிவித்துள்ளார். இதனால் ஊர் பொதுமக்களும் இவர்கள் குடும்பத்தினருக்கு எதிராகவே உள்ளனர்.

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த நிலையில் ஊர் மக்களின் குழந்தைகள் சசிகலாவின் மகனுடன் பேசுவதில்லை. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மகன் பேசுவது குறைந்துள்ளது. மேலும் வயதான தாயாரின் உடல்நிலையும் பாதித்துள்ளது. அண்மையில் ஊர்க்காரர்கள் இணைந்து வந்து சசிகலா குடும்பத்தினருடன் தகராறு செய்து கட்டப்பஞ்சாயத்து செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சசிகலா அவரது குடும்பத்தினருடன் புதுமந்து காவல் நிலையம், ஊட்டி தாசில்தார் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வேறு வழி தெரியாமல் இருந்த இவர்கள் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி செயலாளரிடம் மனு அளித்தனர். இந்த மனுவை சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்களான எங்கள் மூலம் புகார் மனுவாக தயார் செய்து உரிய ஆதாரங்கள் மற்றும் ஏற்கனவே இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் நடத்த பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் ஆகியவற்றை இணைத்து இதன் அடிப்படையில் இப்பிரச்னைகளில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் மனு வழங்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

Related posts

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை!

மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!