சென்னையில் நாளை முதல் 18ம் தேதி வரை நடக்கிறது மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை கண்காட்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் கோடை கொண்டாட்டம் விற்பனை கண்காட்சி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

இதில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களான முந்திரி பருப்பு வகைகள், மசாலா பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், நாட்டு சர்க்கரை, சத்து மாவு, சுடுமண் சிற்பங்கள், கால் மிதியடிகள், பட்டு மற்றும் பருத்திப் புடவைகள், கண்ணாடி ஓவியங்கள், கைவினை பொருட்கள், பனை ஓலை பொருட்கள், பொம்மைகள், காபி பொடி, மிளகு, இயற்கை மூலிகைகள், செயற்கை ஆபரணங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பரிசு பொருட்கள், ஆயத்த ஆடைகள், மர சிற்பங்கள், இயற்கை உரங்கள், தேன், கடலை மிட்டாய், மூலிகை பொடிகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள் மற்றும் திருநங்கையர் சுய உதவிக்குழுக்களும் தங்களின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகள், மஞ்சப் பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சுவை மிகுந்த சிறுதானிய உணவுகளை உண்டு களித்திட உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, இயற்கை முறையில் விளைவித்த காய்கனிகள் மற்றும் மலைப்பகுதிகளில் விளையும் பொருட்களின் விற்பனை சந்தையும் நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியில் நகர்ப்புரங்களில் வசிக்கும் மக்கள் பயன் பெறும் வகையில் தங்கள் பயன்படுத்திய ஆடைகளை மறுபயன்பாட்டிற்கு உகந்தவாறு துணிப்பையாகவோ அல்லது தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற பயன்பாட்டு பொருளாக மாற்றி தரப்படும். இந்த கண்காட்சி நாளை முதல் 18ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். கண்காட்சிக்கு அனுமதி இலவசம். வார இறுதி நாட்களில் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கண்கவர் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாஜ, ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மோதல்

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பாஜ திட்டம்: சச்சின் பைலட்

வலுவான அரசு அமைந்ததால் வெடிகுண்டு வைத்திருந்த பாக்., கையில் திருவோடு தந்துள்ளோம்: பிரதமர் மோடி பிரசாரம்