அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்திடுச்சு… பெட்ரோல், டீசல் விலைய ஏத்திட்டாங்க… மக்கள் மீது அதிக வரி போட்டுட்டாங்க… மோடிக்கு எதிராக பொங்கி எழும் எடப்பாடி

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜ அரசு 2019ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் ஆட்சி அமைத்த பாஜ, பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து விட்டது.

ஒரு லிட்டர் பெட்ரோல் 71 ரூபாயும் டீசல் 55 ரூபாயும் இருந்தது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாயும் டீசல் 94 ரூபாயுமாக உயர்ந்துள்ளது. 2014ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 105 டாலராக இருந்தது. தற்போது ஒரு பேரல் 86 டாலராக குறைந்து விட்டது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிவிட்டனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து விட்டது. மக்கள் மீது அதிக வரியை சுமத்தி விட்டனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஊடகங்கள் ெவளியிடும் கருத்துக்கணிப்புகள் எல்லாம் திணிப்புகளாக உள்ளது. எங்களுக்கு அதில் நம்பிக்கையில்லை. 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். தமிழகத்தில் பெரும் வெள்ளம் வந்தபோது கூட ஒன்றிய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் மோடி மட்டும் இதுவரை 8 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். அடிக்கடி அவர் தமிழகத்திற்கு வருவதால் எந்த பயனும் இல்லை. ஒன்றிய அமைச்சர்களும் தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர். ஒவ்வொரு அமைச்சரும் தமிழகத்திற்கு வந்து செல்லும் போது ஏதாவது ஒரு திட்டத்தை துவக்கி வைத்து சென்றிருந்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருக்கும். வாக்குகளை மட்டும் குறி வைத்து ஒன்றிய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு கூறினார்.

‘அதிமுகவை அழிக்க யாரும் பிறக்கல…’
அதிமுகவை அழிக்கப் போவதாக அண்ணாமலை கூறி இருக்கிறாரே என கேட்ட கேள்விக்கு, ‘அதிமுகவை அழிக்க இதுவரை எவரும் பிறந்ததில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. அதிமுகவில்தான் ஏழைகள் நேரடியாக பயன் பெற்றனர்’ என்றார். அதிமுக டிடிவி தினகரன் கைக்கு செல்லும் என அண்ணாமலை கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, ‘தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார். அப்படி இருக்கும்போது அதிமுக எப்படி அவரது கைக்கு செல்லும். இதுகூட தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்’ என்றார். தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் உங்களது ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு, ‘அவ்வாறு அமையும் போது பார்த்துக்கொள்ளலாம். அப்போது நிலவும் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்போம். தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்று நினைக்கிறீர்களா? தேசிய கட்சிகள் இரண்டும் தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது. தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்றால் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக தனித்து போட்டியிடுகிறோம்’ என்றார்.

‘காவி என்று நிறம் பிரித்து
பிளவுபடுத்த முயற்சி’
எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நேற்று ரோடு ஷோ நடத்தி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து புறப்பட்ட அவர் வின்சென்ட், குமாரசாமிபட்டி, சுந்தர் லாட்ஜ், சுகவனேஸ்வரர் கோயில், திருவள்ளுவர் சிலை வழியாக கன்னிகா பரமேஸ்வரி கோயில் அருகே ரோடு ஷோவை முடித்தார். ரோடு ஷோவின்போது சாலையின் இரண்டு புறமும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து எடப்பாடி பழனிசாமிக்கு பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘காவி என்று நிறம்பிரித்து சாதி, மதத்தால் மக்களை பிளவுபடுத்துவதை அதிமுக ஒரு போதும் ஆதரிக்காது. புதிய தலைமுறை வாக்காளர் அனைவரும் இந்த தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். உங்களுக்கான பல்வேறு திட்டங்களை அதிமுக ஆட்சியில் செயல்படுத்தியுள்ளோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related posts

சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா: கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத் துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி