ஈரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம் ஆடுகளை ஏற்றிச்சென்ற ஆட்டோவை 3 கிமீ பின் தொடர்ந்த வளர்ப்பு நாய்

*சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

ஈரோடு : ஈரோட்டில், ஆடுகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவை 3 கிமீ தூரம் பின்தொடர்ந்து சென்ற நாயின் வீடியோ சமூக வளைத்தலங்களில் பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, கருங்கல்பாளையம், செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். விவசாய கூலித் தொழிலாளி. இவரது தனது வீட்டின் அருகில் பட்டி அமைத்து 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். பப்பி என்ற நாய் ஒன்றையும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வருகிறார். ஆடுகளும், அந்த நாயும் ஒன்றாகவே வளர்ந்ததால் மிகவும் பாசப்பிணைப்புடன் இருந்துள்ளன. ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும்போது, பப்பியும் உடன் செல்வதுடன், ஆடுகளுக்கு பாதுகாப்பாகவும் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஆடுகள் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு, சரியாக உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளன. இதையடுத்து மாதேஸ்வரன், ஆடுகளை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முடிவு செய்தார். அதன்படி அவற்றை பாரம் ஏற்றிச் செல்லும் ஆட்டோவில் ஏற்றினார். சுமார் 3 கிமீ தூரத்தில் உள்ள ஈரோடு, கால்நடை அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அவற்றை கொண்டு செல்ல தயாரானார். எப்போதும், ஆடுகளைவிட்டு பிரியாத நாய் பப்பியும், ஆடுகளுடன் ஆட்டோவில் ஏற முயன்றது.

ஆனால் மாதேஸ்வரன், அதை ஏற்றாமல், ஆடுகளை மட்டும் ஆட்டோவில் ஏற்றி புறப்பட்டார். ஆடுகளை பிரிய மனமில்லாத பப்பி, ஆடுகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவின் பின்னாலேயே சுமார் 3 கிமீ தூரம் ஓடிச் சென்றது. மருத்துவமனையில் இருந்து மீண்டும் ஆட்டோவில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்தபோதும் பப்பி, ஆட்டோவின் பின்னாலேயே 3 கிமீ தூரம் ஓடி வந்துள்ளது. ஆட்டோவை நாய் பின் தொடர்ந்து செல்வதைக் கண்ட நபர் ஒருவர், தனது செல்போனில் அதை வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்