அமலாக்கத்துறையை தவறுதலாக வழிநடத்தும் நிர்மலா சீதாராமன் பதவி விலக ஐ.ஆர்.எஸ் அதிகாரி உண்ணாவிரதம்

சென்னை: அமலாக்கத்துறையை தவறுதலாக வழிநடத்தும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பதவி விலக கோரி ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகன் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் போராட்டம் மேற்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் ஏழை விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது என்பது ஒன்றிய அரசு தவறுதலாக வழிநடத்துகின்றது என்பதை காட்டுகின்றது. ‘ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிப்பது’ போல அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை தாண்டி வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க அமலாக்கத்துறையை உபயோகப்படுத்துகின்றனர்.

இது தொடர்பாக ஏற்கனவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதேபோல், இந்த துறையில் கீழ் நிலை முதல் மேல் நிலை அதிகாரிகள் வரை ஒரு தமிழரும் இல்லை. எனவே தான் என்னுடைய கோரிக்கையாக அமலாக்கத்துறையில் 50 சதவீதம் தமிழர்கள் இருக்க வேண்டும், ஏழை விவசாயிகளுக்கு ஜாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய நிலையில் அதற்கான முறையான விளக்கத்தை ஒன்றிய நிதியமைச்சரும் கொடுக்கவில்லை; சம்மந்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளும் கொடுக்கவில்லை. இதற்கு பாஜ நிர்வாகிகள் தான் விளக்கம் கொடுக்கின்றனர்.

ஏற்கனவே, பாஜவின் அங்கமாக அமலாக்கத்துறை செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் அதனை நிரூபிக்கும் வகையில் அவர்கள் செயல்படுகின்றனர். ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் நிர்மலா சீதாராமன் பதவி விலக கோரி அனுப்பி இருந்த கடிதத்திற்கு இதுவரை எந்தவித பதிலும் இல்லை. அதற்கான தீர்வு கிடைக்கவே உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளேன். தற்போதைய சூழலில் அமலாக்கத்துறையை கை பொம்மையாக வைத்திருப்பது போல, அனைத்து ஒன்றிய துறைகளையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிப்பதற்கு யாராவது ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு நான் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

Related posts

மக்களவை தேர்தலில் பாஜக பின்னடைவை சந்திப்பதால் பங்குச்சந்தைகள் கடும் சரிவு

வாரணாசியில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி 40, பாஜக கூட்டணி 29 இடங்களில் முன்னிலை!

மக்களவைத் தேர்தலில் மாஸ் காட்டும் திமுக.. முன்னிலை வகிக்கும் கூட்டணி வேட்பாளர்கள் : ஒரு தொகுதிகளில் கூட முந்தாத அதிமுக, பாஜக!!