சொத்து குவிப்பு புகார் கேரள முன்னாள் அமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

திருவனந்தபுரம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகாரில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சிவகுமாருக்கு மத்திய அமலாக்கத் துறை 4வது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரளாவில் கடந்த 2011 முதல் 2016 வரை உம்மன்சாண்டி அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சிவகுமார். 2 முறை எம்பியாகவும் இருந்த இவர், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்தார். இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது. திருவனந்தபுரம், கொல்லம் உள்பட பல்வேறு இடங்களில் தனது உறவினர்களின் பெயர்களில் பல மருத்துவமனைகளை வாங்கியதாகவும் புகார் எழுந்தது. இந்தப் புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி கடந்த மாதம் 3 முறை மத்திய அமலாக்கத்துறை சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் கடைசி வாய்ப்பாக இன்று விசாரணைக்கு ஆஜராக சிவகுமாருக்கு மீண்டும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றும் ஆஜராகாவிட்டால் அவர் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க மத்திய அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Related posts

பைக் மீது லாரி மோதியதில் மாநகராட்சி ஊழியர் பலி: மணலி காவல்நிலையம் மக்கள் முற்றுகை

தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை

டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட அபராதத்துடன் தடை விதிப்பு