அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை?.. நீதிமன்ற உத்தரவு நேரில் வழங்கப்பட்டது

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்நகல் இன்று நேரில் வழங்கப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 18 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்ைச அளிக்கப்பட்டதில், அவருக்கு இதயத்தில் 3 இடத்தில் அடைப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர்.

இதற்கிடையில் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் வேண்டுகோளுக்கிணங்க, நீதிபதி அல்லி, மருத்துவமனைக்கு வந்து செந்தில்பாலாஜியை நீதிமன்றக்காவலில் வைத்தார். அதேநேரத்தில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாளில் அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் தயாராகி வருகின்றனர். அதேநேரத்தில், அவரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவரை 8 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். அதில் டாக்டர்கள் அனுமதியுடன் நேற்று முதல் விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து அவரை காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கான நீதிமன்ற உத்தரவின் நகல் இன்று காலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் வழங்கப்பட்டது. இன்று டாக்டர்கள் அனுமதியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் நாளை மறுநாள் பிரமாண்ட பாராட்டு விழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடு

தொகுதிப் பணிகளை மேற்கொள்ளவே அமித் ஷா அறிவுரை கூறினார் என தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம்