அமலாக்கத்துறை வழக்கில் விடுவிக்க கோரிக்கை மீண்டும் வாதிடுவதற்கு செந்தில் பாலாஜி மனு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை உத்தரவு

சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய மனு மீது மீண்டும் வாதிட அனுமதி கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த மனு மீது மீண்டும் வாதிட அனுமதி கோரி செந்தில் பாலாஜி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கேட்டு வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்னும் கிடைக்கவில்லை. அவை கிடைத்த பின் அதனடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பிற்கு வங்கியில் இருந்து பெறப்பட்ட அசல் ஆவணங்கள் (செலான்) வழங்கப்பட்டது. அதை பெற்ற வழக்கறிஞர் மா.கெளதமன், வங்கியில் இருந்து கொடுக்கப்பட்ட அசல் செலான்களில் சில வேறுபாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டினார். அதற்கு, அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.ரமேஷ், இந்த குற்றச்சாட்டு ஏற்புடையதாக இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மறுவிசாரணை கோரும் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்