தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் சமூக விடுதலை வரலாற்றில் தவறாமல் இடம்பெற வேண்டிய தலைவர்களின் பெயர்களில் குறிப்பிடத்தக்கது இமானுவேல் சேகரனாரின் பெயர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான விடுதலை போராட்டங்களில் தமது 18ம் வயதில் கலந்துகொண்டு சிறைக்கு சென்ற சேகரனார், மக்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமை கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் 19ம் வயதில் இரட்டைக் குவளை முறைக்கு எதிரான மாநாட்டை நடத்தினார். அத்துடன் தமது பணியை உதறித் தள்ளிவிட்டு, 1954ம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டையும் நடத்தினார்.

எந்த நோக்கத்திற்காக இமானுவேல் சேகரனார் போராடினாரோ, அந்த நோக்கத்திற்கான போராட்டத்திலேயே, தமது 34ம் வயதில் இவ்வுலக வாழ்வை ஈகம் செய்தார். இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இன்னும் 28 நாட்களில் தொடங்கவிருக்கும் இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டை ஓராண்டுக்கு அரசு விழாவாக கொண்டாடுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அவரது பிறந்தநாள் நூற்றாண்டில், அவரது வரலாறு, தியாகம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும், அவை குறித்த பரப்புரைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது