ஓபிஎஸ்சுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் துரோகம் என்ற கத்தியால் இபிஎஸ் நிச்சயம் வீழ்வார்: டிடிவி.தினகரன் ஆவேசம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான அமமுக தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்களுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாக கூட்டணி அமைப்போம். அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு அறிவிக்கப்படும். எடப்பாடி பழனிசாமி என்ற துரோகியுடன், அமமுக எந்த காலத்திலும் இணைந்து பயணிக்காது. நாடாளுமன்ற தேர்தலிலும் அவருடன் இணைய மாட்டோம்.

ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இதன்படி நாங்கள் ஓபிஎஸ்சுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம். இபிஎஸ்சுக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. நான்கரை ஆண்டு கால அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்தது யார் என்பது சின்ன குழந்தைக்கும் தெரியும்.

அவரை முதலமைச்சர் ஆக்கியவருக்கும் துரோகம், ஆட்சியை பாதுகாத்தவர்களுக்கும் துரோகம், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம். அவர் துரோகம் என்ற கத்தியை கையில் எடுத்துள்ளார். அந்த கத்தியாலேயே அரசியல்ரீதியாக அவர் நிச்சயம் வீழ்வார். அவர் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கிறார். துரோகம் என்றைக்கும் ஜெயிக்காது. அது விழப்போகும் நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு தெரிவித்தார்.

* சுயநலவாதி எடப்பாடி
‘பழைய அதிமுக மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதா’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘‘ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் ஒன்றாக உள்ளோம். அதனை ஏற்க இபிஎஸ் மறுக்கிறார். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. ஆனால் பழனிசாமி போன்ற சுயநலவாதிகள் அதனை தடுக்கின்றனர்’’ என்று டிடிவி.தினகரன் தெரிவித்து உள்ளார்.

Related posts

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து