வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சந்திப்பு

சென்னை: வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு நேற்று ஆலோசனை நடத்தியது. திமுக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு தொகுதி வாரியான நிர்வாகிகள் சந்திப்பினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி வருகிறது. 9வது நாளாக நேற்று காலையில் வடசென்னை, தென்சென்னை தொகுதிக்கான நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது. குழுவை சேர்ந்த அமைச்சர்கள் ேக.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் தொகுதிக்கு உட்பட்ட அமைச்சர்கள்-மாவட்ட செயலாளர்கள்-சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட-ஒன்றிய-பகுதி-நகர- பேரூர் கழக நிர்வாகிகள்-துணை மேயர்-மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சந்திப்பின் போது தொகுதியில் உள்ள கள நிலவரம்-நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது-தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள்-பாக முகவர்களின் பணிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகக் குழுவினர் கேட்டறிந்தனர். இந்தியாவை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பாக நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், நிரூபிக்கிற வகையில் வட சென்னை-தென் சென்னை தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிட வேண்டும் என்ற லட்சியத்தோடு அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றுமாறு குழுவினர் கேட்டுக் கொண்டனர்.தொடர்ந்து மாலையில் மத்திய சென்னை, பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பின் போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தொண்டர்களை அதற்காக தயார்படுத்துவது-கள நிலவரம்-மக்களின் கோரிக்கைகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து திமுக நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை குழுவினர் கேட்டறிந்தனர்.

 

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து