எடப்பாடி பழனிச்சாமி திருந்தினால் அதிமுகவை பலப்படுத்த முடியும்: காஞ்சிபுரத்தில் டிடிவி தினகரன் பேட்டி

காஞ்சிபுரம்: எடப்பாடி பழனிச்சாமி திருந்தினால் அதிமுகவை பலப்படுத்த முடியும் என காஞ்சிபுரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.காஞ்சியில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக மதவாத கட்சி என்பதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. பாஜகவில் அனைத்து மதத்தினரும் உள்ளனர். 3வது முறையாக மோடி பிரதமராவது உறுதி. ஊழல் இல்லாத 10 ஆண்டுகளாக மோடியின் சாதனை ஆட்சி நடந்து வருகிறது. கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் பாஜக எம்பிக்கள் கூடுதலாக சென்று மக்களவையை அலங்கரிப்பார்கள்.ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் அவர் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. அவரது விருப்பப்படியே ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். அதிகமான வாக்குகள் பெற்று வெற்றிபெறுவார். என்னை பொறுத்தவரை பாஜக நிர்ப்பந்திக்கவில்லை. குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடுகிறோம். எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கிய பிறகு எங்கள் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்வேன். அமலாக்கத்துறை என்பது தனிப்பட்ட அமைப்பு. அதற்கு அளவில்லாத அதிகாரம் உள்ளது. இதை நீதிமன்றமும் சொல்லி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி திருந்தினால் மட்டுமே அதிமுகவை பலப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

சிக்கிமில் மீண்டும் எஸ்கேஎம் கட்சி ஆட்சி அமைக்கிறது

சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

20 ஓவர் உலகக்கோப்பை: கனடாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி