சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் சிறப்பான சேவை செய்த இயற்கை ஆர்வலர்களுக்கு பசுமை சாம்பியன் விருது ,₹1 லட்சம் பரிசு

*கலெக்டர் வழங்கினார்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் மிக சிறப்பான சேவை செய்து வருகின்ற இயற்கை ஆர்வலர்களுக்கு பசுமை சாம்பியன் விருது மற்றும் பரிசு தொகை ₹1 லட்சத்திக்கான காசோலைகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் சிறந்த இயற்கை ஆர்வலர்களுக்கான விருதுகள், இயற்கையை பாதுகாக்கும் முறையில் இயங்கி வரும் நிறுவனங்கள் மற்றும் சிறந்த சேவை செய்யும் நபர்களுக்கு மாவட்ட கலெக்டரால் பசுமை சாம்பியன் விருது மற்றும் பரிசு தொகைகளை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதுதானது கலெக்டர் தலைமையிலான குழுவின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு விருது பெறுவதற்கான தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்து 2022-23ம் ஆண்டில் விருது தேர்வுக்கு இரண்டு இயற்கை ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் மிக சிறப்பான சேவை செய்து வருகின்ற நபர்களுக்கும், கல்லூரி மாணவர்களிடையே பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிசந்திரன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பணியில் மிகச் சிறப்பான சேவை செய்த கலவை வட்டம் வாழைபந்தல் கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும், கலவை தாலுகா மேல்புதுப்பாக்கம் சேர்ந்த சிவா ஆகிய இரு இயற்கை ஆர்வலர்களுக்கு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் மூலம் பசுமை சாம்பியன் விருது மற்றும் பரிசு தொகை தலா ₹1 லட்சத்திற்கான காசோலையும் கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

Related posts

நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் வருமா? பயணிகளிடம் கட்டண கொள்ளையை தடுக்க கோரிக்கை

நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை

ஃபெடரேஷன் கோப்பை ஆடவர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா