திருப்பத்தூர் பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலை பின்புறம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு லிங்க வடிவிலான சக்தி வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி சமேத வள்ளி தெய்வான கோயில் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் அளவில் உள்ள இக்கோயிலில் தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து குளித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியவுடன் கடந்த இரண்டு மாத காலமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்தது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் தற்போது கோடைகாலத்தில் இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நேற்று ஆனந்த குளியல் போட கூட்டமாக வந்தனர். இதுகுறித்து வனத்துறை ரேஞ்சர் பிரபு கூறுகையில், ‘தற்போது நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பொதுமக்கள் குளிக்கும்போது பத்திரமாக குளிக்க வேண்டும். பாறைகள் மேல் யாரும் ஏறக்கூடாது. பாறைகள் மேல் ஏறினால் அவர்கள் மீது வனத்துறை சார்பில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். கீழே நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு ஆனந்தமாக இருந்துவிட்டு வீட்டிற்கு செல்லலாம். பாறைகள் மீதும், காட்டுப்பகுதிக்குள் யாரும் நுழையக்கூடாது’ என்றார்.

Related posts

இந்தியாவில் 40 சதவீத வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நீர் தேங்கியது