படப்பிடிப்புக்காக சென்ற போது பிரபல சினிமா இயக்குநர் விஜய்யிடம் போதை ஆசாமி தகராறு: சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸ் விசாரணை


சென்னை: சினிமா படப்பிடிப்புக்காக தனது காரில் சென்ற இயக்குநர் விஜய்யை வழிமறித்து கார் கண்ணாடியை உடைக்க முயன்ற போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் பிரபல திரைப்பட இயக்குநர் விஜய் வசித்து வருகிறார். இயக்குநர் விஜய் ‘தலைவா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இன்று காலை தனது உதவி இயக்குநர்களுடன் புதிய திரைப்பட படப்பிடிப்புக்காக இயக்குநர் விஜய் தனது காரில் சென்று கொண்டிருந்தார். கார் அபிபுல்லா சாலை வழியாக செல்லும் போது, திடீரென போதை ஆசாமி ஒருவர் இயக்குநர் காரை வழிமறித்து காரின் கண்ணாடியை உடைக்கும் வகையில் தாக்கியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத இயக்குநர் விஜய் தனது காரை நிறுத்தினர். பிறகு போதை ஆசாமியிடம் ஏன் கண்ணாடி மீது தாக்குகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு போதை ஆசாமி இயக்குநரை ஆபாசமாக பேசி தாக்க முயன்றுள்ளார். இதை பார்த்த இயக்குநர் விஜய் உடன் வந்த உதவி இருக்குநர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். உடனே போதை ஆசாமி, ஏன் வீடியோ எடுக்கிறாய் என்று கூறி தாக்க முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் அதிர்ச்சியடைந்த இயக்குநர் விஜய் மற்றும் அவரது உதவி இயக்குநர்கள் காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

போலீசார் வருவதை பார்த்த போதை ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வீண் தகராறு செய்து கார் கண்ணாடியை உடைக்க முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இயக்குநர் விஜய் தேனாம்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் உதவி இயக்குநர்கள் எடுத்த வீடியோ மற்றும் சம்பவ நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பி ஓடிய போதை ஆசாமியை தேடி வருகின்றனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்