நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


சென்னை: தமிழகத்தில் சுற்றுலா தலங்கள், கோயில் குளங்கள், அருவிகள், கடல் பகுதிகளில் நீரில் மூழ்கி மரணங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சென்னையை சேர்ந்த கோட்டீஸ்வரி என்பவர் கடந்த 2018ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் நடராஜன், ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 18 தீர்த்த கிணறுகளுக்குள் பக்தர்கள் இறங்கி நீராட அனுமதி இல்லை. தீர்த்தத்தை தெளிப்பதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயில் திருவிழா காலங்களில் மீட்பு படை, கண்காணிப்பு கோபுரம் ஆகியவை மூலம் பக்தர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், தமிழக அரசும், அறநிலையத்துறையும் எடுத்த நடவடிக்கைகள் ஆண்டு முழுவதும் பின்பற்றும் வகையில் இருக்க வேண்டும். ராமேஸ்வரத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை மற்ற கடற்கரை கோயில்களிலும் பின்பற்றி செயல்படுத்த வேண்டும். மீட்பு பணிக்கு கடலோர காவல்படையை பணியமர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். ஆறு, குளம், ஏரி, கடல் போன்ற அனைத்துவிதமான நீர்நிலைகளிலும் விபத்து மரணங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். எச்சரிக்கை பலகைகள், அவசர கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

 

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்