சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்

*விவசாயிகள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரியின் முகப்பு பகுதியில் உள்ளது பூதங்குடி பாசன வாய்க்கால். வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு பூதங்குடி பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த வாய்க்காலில் கடந்த அதிமுக ஆட்சியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.

அப்போது பெயரளவுக்கு மட்டுமே தூர்வாரியதால் மீண்டும் சம்பு செடிகள் ஓங்கி வளர்ந்து புதர்மண்டி மண் திட்டுகள் தோன்றி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயப்பணிகள் பாதிக்கப்பட்டதுடன், பயிர் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. ஆகையால் விரைந்து பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக பூதங்குடி முதல் எண்ணா நகரம் வரை தூர்வாரி கரையை பலப்படுத்த ரூ.24.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சிதம்பரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் தூர்வாரி கரையை பலப்படுத்த விளம்பர பதாகை வைத்தனர். ஒரு மாதத்தை கடந்தும் தூர்வாரும் பணிகள் தொடராமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பூதங்குடி, வெள்ளியக்குடி, பரதூர் உள்ளிட்ட கிராமங்களின் விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆட்சியில் பெயரளவுக்கு, தரமின்றி தூர்வாரி கரையை அமைத்ததால் தற்போது சம்பு மற்றும் கருவேல மரங்கள் ஓங்கி வளர்ந்து புதர் மண்டியுள்ளது. இதனால் கடைமடை பகுதிகளுக்கு பாசனத்துக்கு தண்ணீர் செல்லாததால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் உயரதிகாரிகள் கண்காணிப்பில் முறைகேடுகள் நடைபெறாதவாறு விரைந்து பூதங்குடி வாய்க்காலை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும். கடைமடை பகுதிகளின் பாசனத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்