டாக்டர் இராதாகிருஷ்ணனின் பார்வையில் கல்வி

கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆளுமைத் திறனை வளர்க்கும் முயற்சி. இம்முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களைச் சமூகமானது மாதா மற்றும் பிதாவைத் தொடர்ந்து அடுத்த நிலையில் தெய்வத்திற்கு மேலாக கருதும் நிலை இன்றும் காண முடிகிறது. இச்சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு அவர்கள் மேம்படப் போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் சமூக மாற்றத்திற்கான போர்வீரர்கள் ஆவர். அதில் வெற்றியோ தோல்வியோ என்ற கேள்விக்கு இடமின்றி, அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கும் அனைவரும் தலைவணங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

அந்த வகையில் கல்வியாளர் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதெல்லாம் இவரது பெயரை யாராலும் மறக்க முடியாது. மேலைநாட்டுக் கல்வி, எளிமையான பழக்க வழக்கங்கள், புத்தக விரும்பியாக திகழ்பவர்தான் டாக்டர்.எஸ். இராதாகிருஷ்ணன். அவர் அன்னிபெசண்ட் அம்மையாரின் பேச்சில் கவரப்பட்டதோடு, பிற்காலத்தில் பேச்சுவன்மை மிகுந்தவராகவும், தன்பேச்சால் அனைவரையும் தன்பால் ஈர்ப்பவராகவும் திகழ்ந்தார். அவர் தத்துவ பேராசிரியர் பணியினைச் சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு போன்ற இடங்களிலும் தொடர்ந்து நீண்டகாலமாக பணியாற்றினார்.

இவர்‘‘சர்” பட்டத்தை தனதாக்கிக் கொண்டதோடு தன்னை முழுமையாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்ளாவிட்டாலும், மனமார ஆதரித்தவர்களுள் ஒருவராக விளங்கினார்.கல்வியின் நோக்கம் யாது?இயற்கையோடு இயைந்த முறையிலான கல்வியை அவர் எப்பொழுதும் வரவேற்றார். மனிதனுக்குக் கல்வி பெறும் திறன் இருப்பதுதான் அவனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, என்றார். கல்வியின் நோக்கம் ‘மனித மனத்தில் ஒளி பாய்ச்சி, அவனுக்குள்ளே இருக்கும் குரங்குத் தன்மையை நீக்கி, இதயத்தில் அன்பை வளர்த்து, அனைத்திற்கும் மேலாக உயிரோட்டமுள்ள கற்பனைத் திறனை உருவாக்குவதாகும்’.

விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் மட்டும் கற்பிக்கும் கல்வி, ஒரு மனிதனைச் சிறு தொழில் நுட்பாளனாக உருவாக்குமே தவிர நல்ல மனிதனாக ஆக்காது என்பதை வாதிட்டார். விஞ்ஞானம் அவனுக்கு இயற்கையை வெற்றிகொள்ளவும் பூமியைச் சூறையாடவும் உதவியிருக்கிறது. காற்றில் பறக்கவும் கடலுக்கடியில் நீந்தவும் அவனுக்கு சக்தி அளித்துள்ளது. இவையனைத்தும் மனிதனின் உண்மையான இயல்பு அல்ல. மனிதன் தன்னுடனேயே அமைதியான வாழும் திறனைக் கல்வி அவனுக்கு அளிக்கவில்லை.

மனநோய்கள், மனப்பதற்றம் முதலான கேடுகள் எல்லாம் தவறான கல்வியின் விளைவு. மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றுவதுதான் உண்மையான கல்வி என்றார். அது சமூக நீதியையும் சுமூகமான மனித உறவுகளை வளர்க்கும் கலையாகும். ஒரு கருத்தைக் கூறி அதற்கு ஆதாரமான காரணங்களை ஒருவர் கூறினால், மற்றொருவர் இதை விட சிறப்பான காரணங்களைக் கூறி மறுக்க முடியும். காரண காரிய வாதத்தில் காணும் முடிவுரைகளுக்கு இறுதித்தன்மை கிடையாது என்கிறார்.

பல்கலைக்கழக ஆணையமும் இவரது பரிந்துரைகளும்:

இவர் பல்கலைக்கழக ஆணையத்தின் தலைவராக செயல்பட்டார். அவ்வாணையத்தால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் சில பின்வருமாறு: ஆன்மீகப்பயிற்சி, சுதந்திரமாக சமயம் பற்றி ஆராய்தல் மூலம் தங்களுடைய அணுகுமுறையைத் தாங்களே உருவாக்கி கொள்ள வேண்டும் என்றார்பிராந்திய மொழி ஒன்றை பயன்படுத்தும் வரை ஆங்கில மொழி தொடர்ந்து பயன்படுத்துதல் வேண்டும். கல்வி வாய்ப்புகளைத் திறமையின் அடிப்படையிலேயே வழங்குதல் வேண்டும். இவ்வாணையத்தின் இத்தகைய கருத்துகள் மேலைநாடுகளில் இன்று பின்பற்றப்பட்டு வருவதைக் காணலாம்.அவருடைய உரை எதுவும் அரசியல், கல்வி, சமயம் பற்றியதாக இருந்தாலும் விருந்து படைப்பதாகவும், சிந்தனையை தூண்டும் செயல்களை உள்ளடக்கியதாகவும், இருக்கும். இந்த உரையைப் படிப்பதே ஒரு கல்வியாகும். நீண்ட நினைவாற்றல் கொண்ட இவர், தன்னுடைய எல்லா புத்தகங்களிலும் சிந்தனையைத் தூண்டும் கருத்துகளை ஆங்காங்கே தூவியிருப்பதைக் காணலாம். அமெரிக்காவில் பால் ஆர்தர் வெளியிட்ட ‘‘வாழும் தத்துவ ஞானிகளின் நூல்கள்” என்ற புத்தக வரிசையில் டாக்டர். இராதாகிருஷ்ணன் பற்றி வெளியாகிருப்பதிலிருந்து அவரது தத்துவங்கள் உலகெங்கும் பரவி உள்ளதற்கானச் சான்றுகளை அறியமுடியும். டாக்டர் இராதாகிருஷ்ணனின் தத்துவத்தை‘‘ஆன்மீக மனித நேயம்” என்கிறார்கள். அதனால்தான் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நாமும் கொண்டாடி மகிழ்கின்றோம்.

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்