செங்கோட்டை – தென்காசி இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்படுமா?: ரயில் போக்குவரத்து அதிகரிப்பு

நெல்லை: நாளுக்கு நாள் ரயில் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் செங்கோட்டை – தென்காசி இடையே இரட்டை ரயில்பாதை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். அடுத்தாண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.கொல்லம் – செங்கோட்டை – தென்காசி – நெல்லை வழித்தடம் 1904 ஆண்டிலும், தென்காசி – ராஜபாளையம் – விருதுநகர் ரயில் வழித்தடம் 1927ம் ஆண்டிலும் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக தொடங்கப்பட்டது. செங்கோட்டை – விருதுநகர் 2004ம் ஆண்டிலும், தென்காசி – நெல்லை ரயில் வழித்தடம் 2012ம் ஆண்டிலும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.

8 கிமீ நீளம் கொண்ட செங்கோட்டை – தென்காசி ரயில் வழித்தடத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் மெயில் உள்ளிட்ட 7 ஜோடி பயணிகள் ரயில்கள் உள்ளிட்ட 10 ஜோடி ரயில்கள் தினசரி பயணித்து வருகின்றன. இதுபோக சிலம்பு வாரம் மும்முறை, செங்கோட்டை – தாம்பரம் வாரம் மும்முறை ரயில் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரம் இருமுறை ரயில் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் நெல்லை – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் காலை மற்றும் மாலை வேளைகளில் கிராசிங்காக தென்காசியில் ரயில்கள் அரை மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்படும் நிலை உள்ளது.

ரயில்களை குறித்த நேரத்தில் இயக்குவதற்கும், அதிகப்படியான ரயில்களை இயக்குவதற்கும் இரட்டை அகல ரயில் பாதை மிகவும் அவசியமாகிறது. தற்போது சென்னையில் இருந்து நெல்லை வரை முழுமையாக இரட்டை அகல ரயில் பாதை பணிகள் முடிந்து ரயில்கள் காலதாமதமின்றி இயக்கப்பட்டு வருகின்றன. அதைப்போல இன்னும் சில மாதங்களில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை அகல ரயில் பாதை பணிகள் முழுமையாக முடிந்து பயன்பாட்டுக்கு வர உள்ளது. தென்காசி – செங்கோட்டை வழித்தடத்திலும் இப்போது ரயில்கள் இயக்கம் 100 சதவீதத்தை நெருங்கும் நிலையில், அங்கும் இரட்டை ரயில்பாதை பணிகள் அவசியம் என பயணிகள் கூறுகின்றனர். செங்கோட்டை – தென்காசி இடையே 8 கிமீ நீளத்திற்கு இரட்டை அகல ரயில் பாதை அமைக்க சர்வே எடுக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

அப்போதுதான் நிலம் கையகப்படுத்துதல் பணிகள் தொடங்கி இரட்டை ரயில் பாதை முடியும் வரை ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆக கூடும். எனவே விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ெஜட்டில் அதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.இதுகுறித்து செங்கோட்டை பண்பொழியைச் சார்ந்த ரயில் பயணி சுரேஷ் கூறுகையில், ‘‘தென்காசி வழியாக 13 ஜோடி ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வரும் நிலையில் நெல்லை – தாம்பரம், நெல்லை – மங்களூர், நெல்லை – பெங்களூர், ஈரோடு – செங்கோட்டை ரயில்கள் வருங்காலத்தில் இயக்கப்பட ரயில்வே வாரியத்தின் பரிசீலனையில் உள்ளன.

எதிர்கால ரயில் தேவைகளை கருத்தில் கொண்டு உடனடியாக செங்கோட்டை – தென்காசி இரட்டை அகல ரயில் பாதை அமைப்பதற்கு சர்வே பணிக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். அதிக போக்குவரத்து நெருக்கடி கொண்ட இந்த பாதை போர்க்கால அடிப்படையில் உடனடியாக அமைக்க வேண்டும். இதற்கு மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே அதிகாரிகள் இப்போதிருந்தே அழுத்தம் கொடுத்து இரட்டை இரயில் பாதை பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கோட்டை – தென்காசி இரட்டை ரயில்பாதை பணிகள் இப்போது தொடங்கினால் மட்டுமே, எதிர்காலத்தில் அதை நெல்லை வரை நீட்டிக்க ஏதுவாக இருக்கும்’’ என்றார்.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு