திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக தொகுதிகள் எவை? ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பு

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 நாடாளுமன்ற தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. மீதியுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் எவை என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட கன்னியாகுமரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர், கரூர் தொகுதிகளை ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்து இருந்தது. மேலும் கடந்த முறை போட்டியிட்ட திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகளுக்கு பதிலாக வேறு தொகுதிகளை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று காங்கிரசிடம் திமுக வலியுறுத்தி வந்தது. அதற்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி ஆகிய 4 தொகுதிகளில் ஏதேனும் 3ல் போட்டியிட திமுக வலியுறுத்தியது.

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினருடன் ஆலோசனை நடத்தி வந்தார். இதில் காங்கிரஸ், மதிமுகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காங்கிரஸ், மதிமுகவுக்கான தொகுதிகள் எவை என்பது குறித்து இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!