திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில் ரூ.4,262 கோடி மதிப்புள்ள 4,578 ஏக்கர் பரப்பளவுள்ள கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது

சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலைய துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை 632 கோயில்களுக்கு ரூ.128 கோடி மதிப்பீட்டில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. திருப்பணிகளும், குடமுழுக்குகளும் நடத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. 1,000 ஆண்டுகளுக்கு மேலான 714 கோயில்களை புனரமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ரூ.100 கோடி வழங்கினார். 47 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

ரூ.35 கோடி செலவில் 66 திருக்கோயில்களுக்கு உபயதாரர்கள் திருப்பணி மேற்கொள்கின்றனர். இந்த திருப்பணிகளின் வேகத்தை பார்த்தால், 714 திருக்கோயில்களிலும் 5 ஆண்டுகளில் நிறைவுறும்போது இது ஒரு இமாலய சாதனை. திருச்செந்தூரில் ரூ.324 கோடி, பெரியபாளையத்தில், ரூ.170 கோடி, திருவண்ணாமலையில், ரூ.118 கோடி, இருக்கன்குடியில், ரூ.109 கோடி, ராமேஸ்வரத்தில், ரூ.105 கோடி, பழநியில், ரூ.100 கோடி, வடலூரில், வள்ளலார் சர்வதேச மையத்திற்கு ரூ.100 கோடி, திருத்தணியில், ரூ.90 கோடி, திருவேற்காட்டில், ரூ.63 கோடி, சமயபுரத்தில், ரூ.62 கோடி என்று திருப்பணிகள் தொடருகிறது. சமயபுரம் மாரியம்மன்கோயிலின் 7 நிலை ராஜகோபுரம் உட்பட 6 கோயில்களில் இராஜகோபுரங்கள் ரூ.8 கோடியில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 2022-23-ல் 7 கோயில்களுக்கு புதிய ராஜகோபுரங்கள் ரூ.36 கோடியில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர்கோயில் தேரையும், 80 ஆண்டு ஓடாமல் இருந்த சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவில் தேரையும் வீதியுலா வர வைத்தவர் முதல்வர். 2 ஆண்டுகள் முதல் 87 ஆண்டுகள் வரை ஓடாமல் இருந்த 15 திருத்தேர்களை ஓட வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து இதுவரை ரூ.4,262 கோடி மதிப்புள்ள 4,578 ஏக்கர் பரப்புள்ள நிலம், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் ரூ.3,819 கோடி மதிப்புள்ள 3,177 ஏக்கர் நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. இதை ஒப்பிடுகையில் அவர்கள் ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பை விட 1,085 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,401 ஏக்கர் நிலத்தை கூடுதலாக இரண்டே ஆண்டுகளில் மீட்டுள்ளோம். இந்த பணிகள் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

  • முதல்வர் கையில் கோயில்கள் இன்று பாதுகாப்பாக உள்ளது
    என் நாடு தமிழ்நாடு. இந்த பெயருக்கு உலகில் ஏதுமில்லை ஈடு. இதற்கு ஒரு அவப்பெயர் ஏற்படுமாயின் எதிர்த்து நிற்பேன் துணிவோடு என்று மூவாயிரம் ஆண்டு மொழி வரலாற்றை தோளில் சுமக்கும் எங்கள் தூயவரே. தமிழரின் சுயமரியாதைக்கொரு பங்கம் வரும்போது எல்லாம் பொங்கி களமாடி புரட்டி போடுகின்ற புரட்சி சரித்திரமே, மாமன்னர்கள் உருவாக்கிய கம்பீரமான கலைக் கோயில்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கம்பீரமான தவப்புதல்வர் கையில் இன்று பாதுகாப்பாக உள்ளன. தனிமனிதன் வீழலாம், தமிழ்நாடு மட்டும் வீழவே கூடாது என்ற உணர்வோடு செயல்படும் இணையற்ற முதல்வரே, இனம் காக்கும் தலைவரே, இயங்குகின்ற தலைவராகவும் எங்களையெல்லாம் இயக்குகின்ற தலைவராகவும் இருக்கின்றார் எங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் சேகர்பாபு பாராட்டினார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்