தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி ஏலகிரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

*படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

ஜோலார்பேட்டை : தீபாவளி பண்டிகையை ஒட்டி ஏலகிரி மலையில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். செயற்கை நீரூற்று அருவியில் குளித்தும், படகில் சவாரி செய்தும் விடுமுறையை கழித்து மகிழ்ந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

இங்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்களின் முக்கிய தொழிலாக விவசாயம் வியாபாரம் செய்து வருகின்றனர். ஏலகிரி மலை அடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகளையும், 14 கிராமங்களை கொண்ட ஊராட்சியாகவும் இருந்து வருவது தனி சிறப்பாகும். மேலும், மலைச்சாலை பகுதியில் ஆங்காங்கே பார்வை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மலை உச்சியில் இருந்து தரை மட்டத்தை பார்க்கும் போது கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ள காட்சிகளை படம் எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.

மேலும் இங்குள்ள இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, படகு துறை, முருகன் கோயில், கதவநாச்சி அம்மன் கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, செயற்கை நீரூற்று அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களும் தனியாரின் பல்வேறு பொழுதுபோக்குக்கூடங்களும் சுற்றுலாப்பயணிகள் கண்டுகளிக்க கவர்ந்திழுக்க செய்கிறது. இந்நிலையில் கடந்த 3 தினங்களாக வார விடுமுறையும், தீபாவளி பண்டிகையும் முன்னிட்டு விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்தனர்.

இங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு களித்து குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் படம் பிடித்தும் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் படகில் குடும்பத்துடன் சவாரி செய்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து செயற்கை நீரூற்று அருவியில் இன்ப குளியல் போட்டு மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நேற்றும் விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பை மேற்கொள்ள ஏலகிரி மலை போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியிலும் கொட்டையூர் பகுதியில் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர்.

Related posts

சென்னை மாநகராட்சியில் உள்ள 399 அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு..!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,200க்கு விற்பனை..!!

இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி: உற்சாக வரவேற்ப்பு