முதல்வரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

புழல்: முதல்வரின் காலை உணவுத் திட்டம் குறித்து புழல் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு காலையில் சத்தான உணவுகள் வழங்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

காலை உணவுகளை உட்கொள்ளும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கல்வி கற்று வருகின்றனர். தரமான கல்வி கற்பித்தல், சத்தான உணவு வழங்கப்படுவதால் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை சதவீதம் அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் விதமாக கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், செங்குன்றம் அடுத்த கிரான்ட் லைன் கிராமத்தில் உள்ள புழல் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து பொன்னேரி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் முருகன் நேற்று காலை ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி உணவை சாப்பிட்டார். தொடர்ந்து, மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி, ஆசிரியர்கள் ஹேமலதா, திரிபுரசுந்தரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உடனிருந்தனர்.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்