உடற்கல்வி இயக்குனர், போக்குவரத்து கழக உதவி மேலாளர் உள்பட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் 118 காலி பணியிடங்கள்: அடுத்த மாதம் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் அடங்கிய கல்லூரி உடற்கல்வி மற்றும் அரசு சட்டக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பதவியில் 12 பணியிடங்கள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாளர் 2 இடம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் முதுநிலை அலுவலர் (சட்டம்) 9 இடம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் 14 இடம், சிப்காட் உதவி மேலாளர் 2 இடங்கள், சட்டப்பேரவை தலைமை செயலக பணியில் தமிழ் நிருபர் 5 இடம், ஆங்கில நிருபர் 5 இடங்கள், தமிழ்நாடு புள்ளியல் பணியில் உதவி இயக்குனர் 17 இடம் உள்ளிட்ட 20 வகையான பதவிகளில் காலியாக உள்ள 118 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு அடுத்த மாதம் 14ம் தேதி வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஜூன் 19ம் தேதி முற்பகல் 12.01 மணி முதல் ஜூன் 21ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை திருத்தம் செய்ய காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான தேர்வுகள் 2 தாள்களாக நடத்தப்பட உள்ளது. இதில் தாள்-1 தேர்வில் தமிழ் தகுதித்தாள், பொது அறிவு மற்றும் திறனறிவும், மனக் கணக்கு நுண்ணறிவும் சார்ந்த வினாக்கள் இடம்பெறும். இந்த தேர்வு வருகிற ஜூலை 28ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.

அதை தொடர்ந்து 2வது தாள் தேர்வு நடைபெறும். அதாவது அடிப்படை பொறியியல், வேளாண்மை, மனையியல், புள்ளியியல், புனர்வாழ்வு அறிவியல், பொருளாதாரம், சட்டம், வணிக மேலாண்மை, உடற்கல்வியியல், கணக்கு, பொது நிர்வாகம், சமூப்பணி, நகர் மற்றும் ஊரமைப்பு, குழந்தை வளர்ச்சி, உளவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான வினாக்கள் அவரவர் பணிகளுக்கு ஏற்ப நடத்தப்படும். இந்த தேர்வு ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை (15ம் தேதி நீங்கலாக) நடைபெறும். முதல் தாளில் 150 மதிப்பெண்ணுக்கு கேட்கப்படும் தகுதித்தாளில் குறைந்தது 60 மதிப்பெண் எடுக்க வேண்டும்.

இதுதவிர பொதுப்பாடம், மனத்திறன் சார்ந்த பகுதியில் 150 மதிப்பெண்ணுக்கும், தாள்-2 தேர்வில் 300 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 450 மதிப்பெண்ணுக்கு தேர்வு கணக்கில் கொள்ளப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான அறிவுரைகள், வயது வரம்பு, கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.inல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Related posts

கேரளாவில் 3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் விடுப்பு

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 3 வது நாளாக பிரதமர் மோடி தியானம்; இன்று மாலை டெல்லி செல்கிறார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோவிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்