அன்னையின் 50வது நினைவு தினம்: அரவிந்தர் ஆசிரமத்தில் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்


புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஆசிரமத்தில் அவர் தங்கியிருந்த அறையை தரிசனம் செய்வதற்காக திரளான பக்தர்கள் குவிந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 1878ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பிறந்த அன்னையின் இயற்பெயர் மீரா. இளம் வயதிலேயே அரவிந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கடந்த 1914ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி புதுச்சேரிக்கு வந்தார். அன்னையின் முயற்சியால் புதுச்சேரியை அடுத்த ஆரோவில்லில் சர்வதேச நகரம் தோற்றுவிக்கப்பட்டது.

கடந்த 1973ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை முக்தியடைந்தார். அன்னையின் 50ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை தங்கியிருந்த அறை பக்தர்கள் பார்வைக்காக இன்று அதிகாலை திறக்கப்பட்டது. அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி தமிழகம், புதுச்சேரி மட்டுமன்றி வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, அன்னை தங்கியிருந்த அறையையும், சமாதியையும் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கூட்டு தியானத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.

Related posts

பா.ஜ.க. தொண்டர்களின் அதீத நம்பிக்கையே மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம்: ஆர்.எஸ்.எஸ் குற்றசாட்டு

பாலியல் வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு எதிரொலி தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்