செல்வம் பெருக, கடன் சுமை குறைய வழிபாடு திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் சென்ற பக்தர்கள்

*நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நேற்று ஏராளமான பக்தர்கள் குபேர கிரிவலம் சென்று வழிபட்டனர். மேலும், கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க சன்னதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக அமைந்திருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். ஜோதிப் பிழம்பாக இறைவன் எழுந்தருளியதால், இங்குள்ள மலையே மகேசனாக வணங்கப்படுகிறது. எனவே, பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாட்களில் கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.

திருவண்ணாமலையில், தமிழ் மாதப் பிறப்பு நாட்களில் மலை வலம் வருவதுதான் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த வழக்கம். பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வது கடந்த 1990க்கு பிறகுதான் பிரபலம் அடைந்தது. எனவே, தமிழ் மாதப் பிறப்பு கிரிவலம் குறைந்து, பவுர்ணமி கிரிவலம் வெகுவாக புகழடைந்துள்ளது. அதனால், ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.இந்நிலையில், குபேர கிரிவலம் என்பது கடந்த சில ஆண்டுகளாக பிரசித்தி பெற தொடங்கியிருக்கிறது. கிரிவலப் பாதையின் எட்டு திசைகளிலும் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகளில், ஏழாவது சன்னதியாக அமைந்திருப்பது குபேர லிங்கம். செல்வத்துக்கு அதிபதியாக வணங்கப்படும் குபேரன் வழிபட்ட லிங்கம் என்பதால், குபேர லிங்க சன்னதி என அழைக்கின்றனர்.

கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியும், சிவாராத்திரியும் இணைந்து வரும் நாளில், சிவனை வழிபட்டு குபேரனே கிரிவலம் செல்வதாக பக்தர்களின் நம்பிக்கை. எனவே, செல்வத்துக்கு அதிபதியான குபேரன் கிரிவலம் செல்லும் நாளில், கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும், கடன் சுமை குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு குபேர கிரிவலம் செல்ல உகந்த நாளான நேற்று, பிரதோஷ காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை குபேர லிங்க சன்னதியில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தது. அதையொட்டி, குபேர லிங்க சன்னதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். எனவே, தரிசன வரிசையை முறைப்படுத்த, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

குபேர லிங்க சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு, கிரிவலம் சென்றால் பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையால், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து தொடங்கி 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று மீண்டும் குபேர லிங்க சன்னதியில் நிறைவு செய்தனர். குபேர கிரிவலத்திற்கு பெரும்பாலும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகம் வந்திருந்தனர். ஆனாலும், எதிர்பார்த்த அளவில் பக்தர்கள் வருகையில்லை. உள்ளூர் பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்திருந்தது.

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து