எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை பிரச்னை எடப்பாடிக்கு அருகே ஆர்.பி.உதயகுமாருக்கு இடம்: முதல்வர் கூறியதை ஏற்று சபாநாயகர் அறிவிப்பு

பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை பிரச்னை தொடர்பாக கேள்வி நேரத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதை ஏற்று அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமாருக்கு முன் வரிசையில் இடம் அளிக்க முடிவு எடுக்கப்படும் என்று பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், ஜீரோ ஹவரில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை குறித்து 4 முறை சபாநாயகரை சந்தித்து அதிமுக உறுப்பினர்கள் கடிதம் கொடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக உள்ள மரபை பின்பற்றி எதிர்க்கட்சி தலைவர் அருகே, துணை தலைவருக்கு இருக்கை ஒதுக்கி தர வேண்டும்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம். அதனால் அவருக்கு முன் வரிசையில், எனது இருக்கை அருகே இடம் ஒதுக்கி தர வேண்டும் என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமாருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்பது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து பேசி வருகிறார். நீங்களும் (சபாநாயகர்) இது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு உட்பட்டது என்று சொல்லி வருகிறீர்கள். இதற்கு உதாரணமாக அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால் எடுத்த தீர்மானத்தை சுட்டிக் காட்டி உள்ளீர்கள். இருந்தாலும், நான் சபாநாயகரை கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்னையில் சபாநாயகர் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்து எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

சபாநாயகர் அப்பாவு: நிச்சயமாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது. தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கை அருகே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்துள்ளார். தற்போது அந்த இருக்கை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு மாற்றப்பட உள்ளது. முன்னாள் முதல்வர் என்கிற முறையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் முன் வரிசையில் இடம் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related posts

பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல்

மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி

மராட்டிய மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம்