யானைகளை விரட்ட கோரி வனத்துறையை கண்டித்து விவசாயிகள் தர்ணா

தொண்டாமுத்தூர் : கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட கரடிமடை, மத்திப்பாளையம், குப்பனூர், பச்சாபாளையம், தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1 வாரமாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இந்நிலையில் கரடிமடை, மத்திபாளையம் பகுதியில் 7க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.

யானைகளை விரட்ட தகவல் கொடுத்தும் வனத்துறையினர் மெத்தன போக்கு காட்டி வருவதாகவும், விவசாயிகள் யானைகளை விரட்டினால் அவர்களை மிரட்டி பொய் வழக்கு போடுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.இதற்கிடையே, சிறுவாணி சாலை மாதம்பட்டி தண்ணீர்பந்தல் நால் ரோடு சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை அவ்வழியாக வந்த வாகனங்களை சிறைபிடித்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வனத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். தர்ணாவின்போது நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்சுக்கு வழிவிட்டு தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பேரூர், ஆலாந்துறை தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் விரைந்துவந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, விவசாயிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது, விவசாய நிலங்களை பாதுகாக்கவும், யானைகளை விரட்ட வனத்துறை ஊழியர்களை அதிக அளவில் இப்பகுதியில் நியமிக்க உள்ளதாக உறுதி அளித்தார். இதை ஏற்று மறியலை கைவிட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகள் திடீர் தர்ணா, மறியல் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்