டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகளுக்கு உறுதுணையாக இருப்போம்: துரை வைகோ வேண்டுகோள்

சென்னை: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த ஜனவரி 18ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கிய மகளிர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ‘இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் உத்தரபிரதேச பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் தொடர்ந்து இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கிறார். உடல், மனரீதியாக வீராங்கனைகளை துன்புறுத்துகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரி தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் என அடுத்தடுத்து மல்யுத்த வீராங்கனைகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கங்களை வென்று புகழ் ஈட்டி தந்தவர்களே அநீதிகளுக்கு எதிராக வீதிக்கு வந்து போராட வேண்டிய அவல நிலையுள்ளது பாஜ ஆளும் ஆட்சியில். சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவைச் சார்ந்த இவர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி நாட்டுக்காகப் போராடி பதக்கங்களை வென்றவர்கள். இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சர்வதேச போட்டிகளில் பங்குபெற இயலாத அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தேசப்பற்றை போதிக்கின்ற பாஜ மதவாத சக்திகள் அதற்கு முரணாக செயல்படுகின்றன.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்ட நியாயங்களை மற்ற மாநில முதல்வர்களுக்கும் எடுத்துக் கூறி தேசிய அளவில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு தமிழனும் இந்தியனும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகளுக்கு உறுதுணையாக இருப்போம்.

Related posts

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்