தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 186 எச்ஐவி பரிசோதனை மையங்களை மூட முடிவு: ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம்

தர்மபுரி: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் ஜெயந்தி, மாநில பொதுச் செயலாளர் சேரலாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், இஎஸ்ஐ மருத்துவமனைகள் ஆகியவற்றில் 377 எச்ஐவி பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 186 மையங்களை மூட தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், சமீபத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சேவையில் பாதிப்பு ஏற்படும். இந்நோய் குறித்த விழிப்புணர்வு பணிகளில் தொய்வு ஏற்படுவதுடன், தமிழகத்தில் எச்ஐவி தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உருவாகும். இதனால் ஏஆர்டி சிகிச்சை, மாத்திரைகள் என அனைத்தையும் பணம் கொடுத்து பெறும் நிலை ஏற்படும். இதன் தொடர்ச்சியாக உயிரிழப்புகளும் அதிகரிக்கும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனே தலையிட்டு, ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகளை தடுக்கவேண்டும். இதை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும், சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம் என்றனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்