கடலூர்-விருத்தாசலம்-சேலம் நான்கு வழி சாலை அமைக்கும் பணி தீவிரம்

*விரைந்து முடிக்க வலியுறுத்தல்

வடலூர் : கடலூர்-விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலை 532ல் கடலூர் பச்சையங்குப்பம் முதல் விருத்தாசலம் வரை இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்துதல் பணி மற்றும் பாலங்கள், சிறு பாலங்கள், கான்கிரீட் வடிகால், சாலை மைய தடுப்பான் அமைக்கும் பணி வடலூரில் துவங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர் பச்சையாங்குப்பம் முதல் சின்னசேலம் கூட்ரோடு வரையிலான சிவிஎஸ் எனப்படும் கடலூர்-விருத்தாசலம்-சேலம் (சின்னசேலம் கூட்ரோடு) 532 தேசிய நெடுஞ்சாலையில், அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமின்றி முகூர்த்த நாட்கள், தினம்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொண்ட ஆய்வில் கடலூர் முதல் சின்னசேலம் கூட்ரோடு வரை அன்னவெளி, வன்னியர்பாளையம், பெரிய காட்டுசாகை, சுப்பிரமணியபுரம், குள்ளஞ்சாவடி, தோப்புக்கொல்லை, த. பாளையம், ஊமங்கலம், விருத்தாசலம் புறவழிச்சாலை சந்திப்பு(விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம்), பரவலூர், விளாங்காட்டூர் உள்ளிட்ட இடங்கள் விபத்துகள் அடிக்கடி நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டன.இந்த நிலையில் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற முடிவு செய்து தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு சர்வே எடுக்கும் பணிகளும் நடைபெற்று முடிந்தது.

2021 2022ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.226 கோடி மதிப்பீட்டில் பச்சையாங்குப்பம் முதல் விருத்தாசலம் வரை 47 கிலோ மீட்டர் சாலையின் இருபுறமும் 4.3 மீட்டர், 5 அடி அகலப்படுத்தி நான்கு வழி சாலையாக மேம்படுத்துதல் பணிகள் நேற்று வடலூரில் துவங்கி நடந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

திருமணம் செய்யாமல் கணவன்-மனைவிபோல் வாழ்ந்தபோது எழுதி கொடுத்த சொத்தை ஆண் திரும்ப தருமாறு கோர முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு பெண் புரோக்கர் நதியா உள்பட 4 பேருக்கு குண்டாஸ்: போலீஸ் கமிஷனர் ரத்தோர் உத்தரவு

நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் தயாரிப்பாளருக்கு வாரன்ட்: ஐகோர்ட் உத்தரவு