ஜன.7-ம் தேதி கடலூர், விழுப்புரத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஜன.7-ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலையில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, கள்ளிக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும். ஜனவரி 8ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related posts

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு

ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்