12 ஏக்கரில் பலபயிர் சாகுபடி!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த விவசாயியாக விளங்குகிறார் ஜி.சந்தானம். திருவள்ளூர் பெருமாள் தெருவைச் சேர்ந்த இவர் தனது நிலத்தை எப்போதும் பசுமை மாறா நிலமாகவே வைத்திருக்கிறார். தோட்டப்பயிர், மானாவாரி பயிர், குறுகிய கால பயிர் என அனைத்து வகையான பயிர்களையும் விதைத்து, அதன்மூலம் தொடர்ச்சியாக வருமானம் பார்த்து வருகிறார். அவரது நிலத்திற்குச் சென்றால் எப்போதும் குறைந்தபட்சம் நான்கு, ஐந்து வகையான பயிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயார் நிலையில் இருக்கும். அதுவும் முற்றிலும் இயற்கை வழியில் விளைந்திருக்கும். சந்தானத்தின் விவசாய அனுபவங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு காலைப்பொழுதில் அவரது கழனிக்குச் சென்றிருந்தோம். பயிர்களுக்கு தெளிப்பதற்காக பஞ்சகவ்யம் தயாரித்துக் கொண்டிருந்த அவர் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று பேசத் தொடங்கினார்.

“ ரசாயன உரங்களிடம் இருந்து மண்ணைப் பாதுகாப்பதும் நஞ்சு கலக்காத உணவுகளை விளைவிப்பதும்தான் என்னுடைய நோக்கம். அதற்காகத்தான் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே எங்கள் தாத்தா விவசாயம் செய்து வந்தார். அந்தளவுக்கு நாங்கள் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தாத்தாவைத் தொடர்ந்து அப்பாவும், அப்பாவைத் தொடர்ந்து நானும் இப்போது வரை விவசாயம் செய்து வருகிறோம். அந்தக் காலத்தில் எங்கள் நிலம் முழுக்கவே சிறுதானியங்கள்தான் நிறைந்திருக்கும். சிறுதானியங்களை விளைவித்து அவற்றையே நாங்கள் உணவாக சாப்பிட்டு வருவோம். அதுவும் இயற்கை முறை விவசாயம்தான். இயற்கை விவசாயம் என்றால் இப்போது இருப்பதுபோல் பஞ்சகவ்யம் போன்ற கரைசல்கள் இருக்காது. எங்களது கழனியில் விதைப்பதற்கு முன்பாகவே இரண்டு நாட்கள் ஆடுகளைப் பட்டி போட்டு அடைத்து விடுவோம். ஆடுகள் தங்கிய இடத்தில் விவசாயம் செய்வோம். ஆடுகளின் கோமியம் மற்றும் எருக்களே மண்ணிற்கு நல்ல உரமாக மாறும். அதன் மூலம் மண் வளம் பெற்று விளைச்சல் அதிகமாக கிடைக்கும். அப்படித்தான் தாத்தாவும் அப்பாவும் விவசாயம் செய்து வந்தார்கள். நான் சிறுபிள்ளையாக இருக்கும்போதே தாத்தா என்னை வயலுக்கு கூட்டிச் செல்வார். அவரின் வயல் வேலைகளை பார்த்தபடியே அனைத்து வகையான விவசாய வேலைகளையும் கற்றுக் கொண்டேன். மண், விதை, வயல், பூச்சி விரட்டி, விதைப்பு, அறுப்பு, விற்பனை என அனைத்து வகையான விவசாய வேலைகளுமே எனக்கு அத்துப்படி.

எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்தே விவசாயம்தான் எனக்குத் தொழில். எனது கழனியில் எப்போதும் விவசாயம் நடந்தபடி இருக்கும். எல்லா பட்டத்திலும் ஏதாவது ஒரு பயிர் நடவு நடந்தபடி இருப்போம். கடந்த வாரம்தான் தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை அறுவடை செய்தேன். இரண்டு நாட்களுக்கு முன்புதான் வேர்க்கடலை அறுவடை செய்தேன். இதுபோக எனது நிலத்தில் வாழை, எள், வெங்காயம், மிளகாய் என இன்னும் பல பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருக்கிறது.எள் ஒரு மானாவாரி பயிர். எள் பயிரிடுவதற்கு இரண்டு பட்டங்கள் இருக்கின்றன. ஒன்று தை பட்டம். மற்றொன்றுசித்திரைப் பட்டம். சித்திரைப் பட்டத்தில் எள் விதைத்தால் வயலுக்கு தேவையான நேரம் தண்ணீர் கொடுக்க வேண்டும். தை பட்டத்தில் விதைத்தால் தண்ணீர் தேவைப்படாது. எள்ளுக்கு ஒரே ஒரு பராமரிப்பு என்றால் அது களை பறிப்பது மட்டும்தான். எள் விதைத்து பத்தாவது நாளில் மண்ணில் இருந்து எள் செடி வெளியே தெரிய ஆரம்பிக்கும். அதில் இருந்து இருபதாவது நாளில் களை எடுக்க வேண்டும். எள்ளைப் பொறுத்தவரை கொஞ்சம் இடைவெளி இருப்பது நல்லது. ஒரு ஏக்கருக்கு எள் விதைப்பதற்கு சரியாக இரண்டு கிலோ விதைகள் தேவைப்படும். நான் ஒரு ஏக்கருக்கு விதைத்திருக்கிறேன். எள்ளைப் பொறுத்தவரை நான் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 6 மூட்டை வரை அறுவடை எடுத்திருக்கிறேன். ஒரு மூட்டை என்பது 80 கிலோ. அதேபோல, எங்கள் பகுதியில் எள்ளில் அதிக விளைச்சல் எடுத்ததும் நான்தான். எள்ளை நேரடியாகவும் விற்பனை செய்கிறேன். எண்ணெய்யாக மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்கிறேன். எப்படிப் பார்த்தாலும்எள்ளில் நல்ல லாபம் பார்க்கலாம்.

அதேபோல, 30 சென்டில் மிளகாய் சாகுபடி செய்து வருகிறேன். மிளகாயை நாங்கள் காயாக பறிப்பது கிடையாது. செடியிலேயே பழுக்க விடுவேன். பழுத்த பின்னர் அந்த மிளகாயைப் பறித்து காயவைத்து வத்தலாக விற்பனை செய்து வருகிறேன். வத்தலாக விற்பதன் மூலம்தான் நல்ல லாபம் ஈட்ட முடியும். வெங்காயமும் அப்படித்தான். சின்ன வெங்காயம் பயிரிட்டு இப்போது அதுவுமே அறுவடைக்குத் தயாராக இருக்கிறது. தோட்டக் காய்கறிகளைப் பொறுத்தவரை அனைத்து வகையான காய்கறிகளையும் பயிரிட்டு இருக்கிறேன். இதுபோக, வாழைத்தோப்பும் இருக்கிறது. நேந்திர வாழை, ரஸ்தாளி, மொந்தன், கற்பூர வாழை என பல வகையான வாழை மரங்கள் இருக்கிறது. எனக்குச் சொந்தமாக மட்டும் 12 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை பகுதியாக பிரித்து தோட்டப்பயிர்கள், பணப்பயிர்கள், நெல் என பருவத்திற்கும் பட்டத்திற்கும் தகுந்தபடி தொடர்ந்து விவசாயம் செய்கிறோம். எந்த விவசாயம் செய்தாலும் சரி அதை இயற்கை விவசாயமாகத்தான் செய்து வருகிறேன். எனது நிலம் இயற்கை முறை விவசாயத்திற்கு நன்கு பழகிப்போனதால் என்ன விவசாயம் செய்தாலும் நோய்த்தாக்குதல் குறைவாகவே இருக்கிறது. இயற்கை விவசாயத்திற்கு அடித்தளமாக இருக்கும் பனம்பழக் கரைசல், பஞ்சகவ்யம், தேமோர் கரைசல் என இந்த கரைசல்களைத்தான் பயன்படுத்துகிறேன். அதுவே வளர்ச்சி ஊக்கியாகவும்,பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது.

நான் விவசாயிகளுக்கு சொல்ல வருவது ஒன்று மட்டும்தான். மண்ணை மலட்டுத்தன்மையாக்கும் பிற கலப்பு உரங்கள் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும். அதன் மூலம் கிடைக்கும் மகசூல் முழுக்கவே நஞ்சுதான். கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தை இயற்கைக்கு பழக்கப்படுத்தினால் நிலம் நம்மைக் கைவிடாது. கண்டிப்பாக செயற்கை உரங்களை விட இயற்கை உரங்களில் நல்ல மகசூல் எடுக்கலாம். அதற்கு நானே சாட்சி. எனது நிலத்தில் கிடைக்கும் விளைபொருட்களை பெரும்பாலும் நான் வியாபாரிகளுக்கு கொடுப்பது கிடையாது. நேரடியாக நானே விற்பனை செய்கிறேன். அரிசி முதல் எள் வரை நானே விற்பனை செய்வதால் வருமானமும் கூடுதலாக கிடைக்கிறது. இப்படி நிலத்தை கிடப்பில் போடாமல் ஏதாவது ஒரு விவசாயம் செய்துவரும்போது அதுவும் பலதரப்பட்ட பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு பயிரில் இருந்து வருமானம் வந்தபடி இருக்கிறது. தொடர் விவசாயத்தின் மூலம்தான் தொடர் வருமானம் சாத்தியம்’’ என மகிழ்வோடு கூறி முடித்தார் சந்தானம்.
தொடர்புக்கு:
ஜி.சந்தானம்: 94431 92393.

 

Related posts

சென்செக்ஸ் 534 புள்ளிகள் சரிந்து 73,953 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

யூடியூபர் இர்பான் விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்தது சுகாதாரத்துறை!!

மாருதி பிரான்க்ஸ் டெல்டா பிளஸ்