உற்பத்தியாளர்களிடம் ரூ.38க்கு வாங்கப்படும் ஆவின் பால் கொள்முதல் லிட்டருக்கு ரூ.3 உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும், கால்நடை மருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி முதல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு, பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமேயாகும். இந்தச் சூழ்நிலையில், இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கை அரசால் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு, இடுபொருட்களின் விலை உயர்வை ஈடுசெய்திடவும், பால் உற்பத்தியை உயர்த்தி, கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு வழங்கிட வழிவகுத்திடவும், ஒரு லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகையாக ஆவின் நிறுவனத்தால் வரும் 18ம் தேதி முதல் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35லிருந்து ரூ.38ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44லிருந்து ரூ.47ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். பால் உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோர் நலனையும் பாதுகாத்திடத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆவின் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒடிசா மாநில புதிய முதலமைச்சர் இன்று தேர்வு

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்