நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை கையகப்படுத்திய விவகாரம்; இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர்களுக்கு கண்டனம்: நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறி பெண்ணின் வீட்டை கையகப்படுத்திய விவகாரத்தில் சம்மந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டையார்பேட்டையை சேர்ந்த ஜெயஸ்ரீ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். நான் குடியிருக்கும் வீடு தொடர்பாக எனக்கும், என் நெருங்கிய உறவினர் வதனி என்பவருக்கும் பிரச்னை உள்ளது.

இதையடுத்து சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நான் குடியிருக்கும் வீட்டில் எந்த பிரச்னையும் செய்யக்கூடாது என்ற தடை உத்தரவை கடந்த 12ம்தேதி பெற்றேன். ஆனால், அதன்பின்னர் வதனி சில வழக்கறிஞர்களை அழைத்துக் கொண்டு, தண்டையார் பேட்டை போலீசாரின் உதவியுடன் என் வீட்டை கைப்பற்றிக் கொண்டார் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வீட்டை கையகப்படுத்தும் போது அங்கு இருந்த வழக்கறிஞர்கள், போலீசார் புகைப்படத்தை மனுதாரரின் வழக்கறிஞர் விஜயேந்திரன் தாக்கல் செய்தார். இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது. வக்கீல்கள், இதுபோன்று தங்களது கட்சிக்காரர்களுடன் சென்று சொத்துக்களை கையகப்படுத்தும் வேலையை செய்யக்கூடாது. இவ்வாறு செய்வதால் ஒட்டுமொத்த வக்கீல் தொழிலையும் அசிங்கப்படுத்துவதாகும். இந்த விஷயத்தில், இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியதுள்ளது. எனவே, தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் இன்று பிற்பகலில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related posts

வருண்காந்திக்கு சீட் வழங்காதது ஏன்?.. மேனகா காந்தி விளக்கம்

சம்பாதிப்பதற்காகவா அரசியலுக்கு வந்தேன்?… அமைச்சர் ரோஜா கேள்வி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின்படி 2 மனைவி இருந்தா ரூ2 லட்சமா?.. சர்ச்சை பேச்சு குறித்து காங். வேட்பாளர் விளக்கம்