பாஜவின் 10 ஆண்டு ஆட்சியில் நாடு எந்த வளர்ச்சியும் அடையல… சல்லி சல்லியா நொறுக்கிய சீமான்

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நாகப்பட்டினத்தில் நேற்று பிரசாரம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: மோடியின் ஆதரவுடன் அதானி கட்டிவரும் துறைமுகத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து கற்களையும், மணல்களையும் எடுத்து செல்கின்றனர். மலைகளை உடைத்து எடுத்து செல்லும் கற்கள் மீண்டும் உருவாகாது. இப்படி தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டி செல்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மோடியின் தாடி தான் வளர்ந்துள்ளது. ஆனால் நாட்டில் வளர்ச்சி இல்லை. தேர்தல் காலத்தில் கச்சதீவு குறித்து மோடி பேசுகிறார். கடந்த 10 ஆண்டு காலமாக மோடி கோமாவில் இருந்துள்ளார். அதனால் தான் இதுவரை கச்சதீவு குறித்து அவருக்கு தெரியவில்லை. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது அதை தடுக்க முடியவில்லை. காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தருவோம் என பாஜ உறுதி அளிக்குமா? அப்படி உறுதி அளித்தால் கர்நாடகாவில் பாஜ வெற்றி பெறுமா? கடந்த 10 ஆண்டு காலத்தில் பாஜ மதத்தை வைத்து தான் அரசியல் செய்து கொண்டு இருந்தது.

தற்போது 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜ சொல்லி வருவதால் அவர்களை பொறுத்த வரை மீதமுள்ள 144 தொகுதிகளில் தான் தேர்தல். இதில் இருந்து வாக்கு இயந்திரம் ஒன்றிய அரசின் வசம் உள்ளது என்பது தெரிகிறது. இதனால் தான் இயந்திர முறையில் வாக்குப்பதிவை கைவிட்டு சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என சொல்லி வருகிறோம்.

உலகிலேயே இந்தியா, நைஜீரியா ஆகிய இரண்டு நாடுகளில் மட்டும் தான் இயந்திர முறையில் வாக்குப்பதிவு உள்ளது. எனவே ஒருவர் தான் நாட்டை ஆட்சி செய்யப்போகிறார் என்கிற சர்வாதிகார நிலைப்பாடு போய், கொடுங்கோல் ஆட்சி அமையப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

திருப்பூரில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்கள்

அடகு கடையில் போலி நகை தந்து ரூ.2.95 லட்சம் மோசடி

குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞரின் நிலை குறித்து தகவல் எதுவும் தெரியாததால் அவரது குடும்பத்தினர் தவிப்பு