கொரோனா ஆய்வு நிதியில் முறைகேடு சித்தா டாக்டர்களிடம் விசாரித்து நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா தொற்று ஆய்வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்தது தொடர்பாக தாம்பரம் சானிடோரியம் சித்தா டாக்டர்களிடம் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் அஸ்தினாபுரத்தை சேர்ந்த சித்தா டாக்டர் எஸ்.விஷ்வேஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், ஆயுஷ் அமைச்சகம் கொரோனா தொடர்பான ஆய்வுகளை நடத்த 2020ல் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியை தேசிய சித்த மருத்துவ நிறுவன டாக்டர்கள் ஆர்.மீனா குமாரி, எம்.மீனாட்சி சுந்தரம், ஜி.ஜெ.கிறிஸ்டியன், பி.சண்முகப்பிரியா, ஏ.மாரியப்பன், வி.சுபா ஆகியோர் மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசுக்கும், மத்திய விஜிலென்ஸ் அதிகாரிக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கான்சியஸ் இளங்கோ ஆஜரானார். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆதி குமரகுரு, மனுதாரர் புகாரின் அடிப்படையில், 12 வாரத்துக்குள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் மற்றும் மீனாகுமாரி உள்ளிட்ட டாக்டர்களிடம் விரிவான விசாரணை நடத்தி, ஒன்றிய அரசு தகுந்த உத்தரவை 12 வாரத்துக்குள் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related posts

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை